கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தனியார் நாளிதழில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர்  அம்மருத்துவமனையில் கொரோனா வார்டில் நிலவும் அவல நிலை குறித்து தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு கவனத்தை ஈர்த்தது வருகிறது.



 

அவர் எழுதியுள்ள பதிவில், "காலையில் அட்மிட் ஆனேன், எங்கள் செய்தியாளர் பிரஷரின் பேரில் சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு பெட் கிடைத்தது. தற்போது கடுமையான காய்ச்சல், தலைவலி இருக்கிறது. காலையில் இருந்த மூச்சுத் திணறல் இப்போது இல்லை. மூன்றரை மணியாகிறது  செவிலியர், மருத்துவர் யாரும் இந்த வார்டை எட்டிக்கூட பார்க்கவில்லை.

 

12 மணியளவில் கபசுர குடிநீர், சுண்டல், சாத்துக்குடி, முட்டை வழங்கும் வண்டி வந்து நின்றது. வண்டியை தள்ளிவந்த பணியாளர்கள் முதலிலேயே சொல்லிவிட்டனர். அதாவது இன்று, நேற்று அட்மிட் ஆனவர்களுக்கு இந்த பொருள்கள் கிடையாதாம். கபசுர குடிநீரைப்பெற டம்ளரை எடுத்துச்சென்ற நான் ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டேன். யார் போட்ட உத்தரவோ இது தெரியவில்லை. அதேபோல் 3 மணிக்கு சாப்பாடு வண்டி வந்தது. சாப்பாடும் அதேபோலதானாம், அதாவது இன்று அட்மிட் ஆனவர்களுக்கு இல்லையாம். அட்டெண்டருடன் வந்த நோயாளிகளுக்கு கவலையில்லை, வெளியில் சென்று வாங்கிவந்து கொடுத்துவிட்டனர். எனக்கு நண்பர் ஒருவர் உணவு வாங்கிக்கொடுத்து உதவினார். 



 

வழக்கமாக ஒவ்வொரு வார்டிலும் நர்சிங் ஸ்டேஷன் இருக்கும். ஆனால் இங்கு 4 வார்டுகளுக்கு சேர்த்து ஒரே நர்சிங் ஸ்டேஷன்தான். அது எல்லா வார்டுகளில் இருந்தும் சற்று தொலைவில்தான் இருக்கிறது. அவசரத்துக்கு அக்கம்பக்கத்து பெட்டில் இருப்பவர்கள் உதவிக்கொள்கின்றனர். அட்மிசன் போடும்போது 4 வகையான 40 மாத்திரைகள் கொடுத்தனர். இதை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை செவிலியர்கள் வந்து சொல்லிக்கொடுப்பார்கள் என்றனர். அப்படியான யாரும்தான் இங்கு வரவில்லையே. கடுமையான தலைவலி, காய்ச்சல் காரணமாக நான் ஒரு பாராசிட்டமால் போட்டுக்கொண்டேன்.

 

என்னுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கிடைக்காததாலும் எதை எப்போது சாப்பிட வேண்டும் என்பது தெரியாததாலும் நீரைப்பருகி விட்டு படுத்துக்கொண்டனர். உணவு வினியோகத்தின்போது ஒரு சுவையான நிகழ்வு நடந்தது. எல்லோருக்கும் உணவு விநியோகம் செய்த மருத்துவமனை பணியாளர் எனக்கு வழங்காமல் போகவே பக்கத்து பெட்டில் இருக்கும் நபரின் மனைவியான இஸ்லாமிய பெண்மணி, "அக்கா இந்த பெட்டில் இருக்கறவருக்கும் கொடுங்க, காலையில் வந்தார், அவருக்கும் பசிக்கும் இல்ல, மீதி சாப்பாடு பொட்டலம்தான் இருக்கிறதே" என்றார். அதற்கு அந்த பணியாளர் உடனே, "உனக்கு வந்திடுச்சி இல்ல? பக்கத்து இலைக்கு ஏன் பாயசம் கேட்கிற" என்றார் அதட்டலுடன்.



 

எனக்காக பரிந்து பேசிய பெண்ணுக்கு சங்கடமாகப்போயிற்று. அரசு மருத்துவமனைகள் தினசரி ஆயிரக்கணக்கானோரை கையாளும் கட்டாயத்தில் இருப்பவை. இங்கு இதுபோன்ற நிகழ்வுகள் வெகுசாதாரணமானவை தான். பார்க்கப்போனால் தவிர்க்கமுடியாதவையும் கூட. ஆனால் அதேநேரம் அரசு மருத்துவமனைகள்தான் ஏழை நோயாளிகளின் கடைசி நம்பிக்கையாக இருப்பவை. நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவது அவை சரிசெய்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே. கடைநிலை மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்வதற்காகவே" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலாவிடம் கேட்ட போது, "செய்தியாளரின் இந்த பதிவு எனது கவனத்திற்கு வந்துள்ளது. இப்பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.