1991 மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்பதுரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இதுநாள் வரையில், கிட்டத்தட்ட 30 வருடங்களாக சிறையில் உள்ள அந்த ஏழு பேர் யார், அவர்களின் பின்னணி என்ன ? அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் யாவை ?



  1. நளினி


வழக்கின் முதல் குற்றவாளி இவர்தான். அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த முருகனை காதலித்துக்கொண்டிருந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனுக்கும் உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர். குண்டுவெடிப்பு நடந்த அன்று நளினியும் சுபாவும் சம்பவ இடத்தில் ஒன்றாக இருப்பதுபோன்ற புகைப்படத்தை அரிபாபு என்பவர் தனது கேமராவில் பதிவு செய்திருந்தார்.  இந்த புகைப்படம்தான் இவர்களை கண்டுபிடிக்கவும் கைதுசெய்யவும் உதவியது.




  1. சாந்தன்


சுரேந்திரராஜா என்று அழைக்கப்பட்ட இந்த சாந்தன்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு அடுத்து இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இவர் விடுதலைப் புலிகள் உளவுப்பிரிவில் செயல்பட்டவராக அறியப்பட்டவராக இருந்ததால் 1991 ஜூலை 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்




  1. முருகன்


ஸ்ரீதரன் என்கிற முருகன் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். 9 சகோதரிகளுடன் பிறந்த முருகன், 1987-ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார். நளினியுடனான முதல் சந்திப்பிலேயே காதல் அரும்ப, இருவரும் திருப்பதிக்கு வந்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஹரித்ரா என்ற ஒரே மகள் இருக்கிறார். தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார்.



  1. ராபர்ட் பயஸ்


குமாரலிங்கம் என்ற இந்த ராபர்ட் பயஸ்தான் இந்த வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும், குடும்பத்துடன் சென்னை வந்து போரூரில் வீடு எடுத்து தங்கியிருந்தார். விடுதலைபுலிகள் இயக்கத்தை சேர்ந்த சிவராசன் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு – ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்ட இவர் அதற்கான காலம் நிறைவடைந்தும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்



  1. ஜெயக்குமார்


இவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 10-வது குற்றவாளி, இவர் 9வது குற்றவாளியான ராபர்ட் பயசின் சகோதரியின் கணவர். குண்டுவெடிப்புக்கு உதவும் வகையில் வயர்லெஸ் இயக்குவதற்கு பேட்டரி உள்ளிட்ட பொருட்களை வாங்கி தந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர். இவர் மூலமே புலிகளின் உளவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கு வயர்லெஸ் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



  1. ரவிச்சந்திரன்


ரவி என்கிற இந்த ரவிச்சந்திரன்தான் குண்டு வெடிப்பு வழக்கில் 15-வது குற்றவாளி, இவர் தமிழ்நாட்டின் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். 15 வயதிலேயே இலங்கைக்கு சென்று புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டவர். 1991-ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு வந்த பிறகு இவரது தலைமையில்தான் தனி தமிழ்நாடு கோரி போராடுவதற்கு புரட்சிப்படை அமைக்கப்பட்டது.  சிவராசனுக்கும் சுபாவிற்கும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தது, அவர்கள் தப்பிச்செல்ல உதவியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ரவிச்சந்திரனுக்கு,  விதிக்கப்பட்ட தண்டனையும் ஆயுளாக குறைக்கப்பட்டு அதற்கான ஆண்டுகளும் முடிவடைந்த பின்னரும் இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையிலேயே இருக்கிறார்.




 



  1. பேரறிவாளன்


ராஜீவ்காந்தி வெடி குண்டு வைத்து கொல்லப்பட்ட வழக்கில் 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்தான் இந்த பேரறிவாளன். அறிவு என அழைக்கப்பட்ட இவர்,  வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். திராவிட இயக்க பின்புலம் கொண்டது பேரறிவாளனின் குடும்பம் என்பதால், டிப்ளமோ படித்த பின்னர் பெரியார் திடலில் கணினி இயக்குபவராக பணியாற்றி வந்தார். இங்குதான் இவரை அடுத்தநாள் விட்டுவிடுகிறோம் என்று சொல்லி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் மீதான குற்றச்சாட்டு வெடிகுண்டுக்கு தேவையான 2 வோல்ட் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பதுதான்.