முதுமலை தெப்பக்காட்டில் வளர்க்க கொண்டு செல்லப்பட்ட தாயை பிரிந்த குட்டியானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


நீலகிரி மாவட்டம் முதுமலை சரகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் இங்கு வருவது வழக்கம். இதனிடையே கடந்த மார்ச் 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 


இதில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட The Elephant Whisperers படம் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை பெற்றது. கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய இப்படமானது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக யானைகளை பராமரித்து வரும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி  குறித்து காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 


இதனால் உலகம் முழுவதும் முதுமலை தெப்பக்காடு பிரபலமானது. பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை காணவும், அப்படத்தில் இடம் பெற்ற யானை ரகுவை காணவும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அதேபோல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரும் விரைவில் தெப்பக்காடு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கடந்த இருவாரங்களுக்கு முன்பு  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடுபட்டி வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை ஒன்று 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.


உடனடியாக தகவலறிந்து வந்து குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் கூட்டத்துடன் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில்  கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று அந்த யானை தெப்பக்காடு  யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும்  இந்த குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பை ஆஸ்கர் புகழ் பொம்மன், பெள்ளி ஆகியோரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.


இதையடுத்து அந்த யானையை இருவரும் பராமரித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானையை கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகளை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் குட்டி யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.