குளித்தலையில் சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி ஐயப்ப பக்தர் பலியானார். தந்தை மகன் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள வில்லத்தூர் மேல தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் வயது 42. இவர் திருப்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். டிரைவர் ஆன இவர் குலதெய்வம் கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக தனது மகன் ஹரிகிருஷ்ணா வயது 16. தனது தங்கை வாசுகி மகன் பாரதி 10 ஆகிய இரண்டு பேரையும் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருந்து திருவாரூருக்கு கடந்த 25 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார்.


 


 



 


 


தடுப்பு சுவரில் மோதியது.


கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


 


 





 


ஐயப்ப பக்தர் பலி.


பின்னர் மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாரதி நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பாரதி ஐந்தாம் வகுப்பு படித்து வந்ததும் அவன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.