கடந்த ஏப்ரம் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டு காலமாக கடலூர் சட்டமன்ற உறுப்பினராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்த அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.சி.சம்பத் தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பனிடம் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
சட்டசபைத் தேர்தலில் முன்னாள் தொழில் துறை அமைச்சர் சம்பத்தின் தோல்விக்கு, கடலுார் நகர துணைச் செயலர் கந்தன் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயிலில் இருந்தபடி சத்தியம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதிமுக நகர துணை செயலாளர் கந்தன். அதில்,
கடலுார் தொகுதி, முதுநகரில் 13 வார்டுகள் மற்றும் காலனி பகுதியில் தேர்தல் பொறுப்பை, என்னிடம் சம்பத் ஒப்படைத்தார். அவர் கொடுத்த பொருளையோ, பணத்தையோ மக்களுக்கு கொடுத்து உண்மையாக வேலை செய்தேன் அய்யனார் மேல் ஆணை. இந்த நிமிடம் வரை முன்னாள் அமைச்சர் சம்பத் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை.
நான் தவறு செய்திருந்தால் அய்யனார் எனக்கு தண்டனை தருவார். சம்பத் உடனேயே இருந்து அவருக்கு துரோகம் எய்தவர்களை விரைவில் அய்யனார் காட்டிக் கொடுப்பார். அவருடன் இருந்தவர்கள் பொய்யாக நடித்து தேர்தலில் பழிவாங்கியது சம்பத்துக்கே தெரியும். இவ்வாறு அதிமுக துணை செயலாளர் கந்தன் பேசியது இதனால் கடலூர் மாவட்ட அதிமுகவினர் இடையே சலசலப்பையும் பரபரப்பும் ஏற்படுத்தியுள்ளது.