தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது ஆயுத பூஜை. எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு அவர் செய்யும் தொழிலே பிரதான தெய்வம் ஆகும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் நாம் செய்யும் தொழிலை போற்றி வணங்கி விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை கொண்டாட்டம்:


நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு காலை முதலே கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.


ஆயுத பூஜையில் மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்வது வழக்கம் ஆகும். பூக்கள், பழங்கள், அவல் பொரி வைத்து வீடுகளில் வழிபாடு செய்வது வழக்கம் ஆகும். ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கியமான சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வரத்து நேற்று முன்தினம் முதலே வழக்கத்தை விட அதிகளவில் குவியத் தொடங்கியது.

பூக்கள், பழங்கள், காய்கறிகள் விற்பனை படுஜோர்:


சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவை என முக்கியமான நகரங்களின் பெரும் சந்தைகளில் நேற்று முதலே வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பூக்கள் சந்தையான தோவாளையில் பூக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது. இருப்பினும் தொடர் மழை காரணமாக பூக்கள் விலை எதிர்பார்த்ததை விட அதிகளவில் இருந்தது.


அதேபோல, காய்கறிகளின் விலையும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. மழை காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளி வரத்து குறைந்தளவு இருப்பதால் வெங்காயம், தக்காளி விலை வழக்கத்தை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் ஆயுத பூஜை வழிபாடு மாலை நேரத்திலே நடைபெறும் என்பதால் இன்று காலையும் கடைகளில் வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. மஞ்சள், வாழை இலைகள், வாழைப்பழங்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை காலை முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சொந்த ஊருக்குச் சென்ற பக்தர்கள் கூட்டம்:


ஆயுத பூஜை, விஜயதசமி காரணமாக தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் பேருந்துகளில், ரயில்களில் அலைமோதியது. சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், எழும்பூர் ரயில் நிலையத்திலும் சொந்த ஊர் செல்ல பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.


பேருந்துகளில் கூட்டம் அலைமோதியதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலையும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆயுத பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் போலீசார்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.