சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக சேலம் ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே நகர் ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் இரவு முழுவதும் சிரமத்தை சந்தித்தனர். இதனால் சேலம் மாநகர் சிவதாபுரம், செஞ்சிக்கோட்டை, மலகாட்டான் தெரு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாநகர பகுதியில் இருந்து சிவதாபுரம் வழியாக இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே தரைப்பாலம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்குள் சிக்கிய லாரி ஒன்று முழுமையாக மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பலர் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 



மேலும் ரயில்வே தரைப்பாலத்தின் வழியாக சென்றுவிடலாம் என்று முயற்சித்தபோது கொரியர் வாகனம் பாலத்திற்குள் மாட்டிக்கொண்டது. உடனடியாக ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியேறும் முயற்சிப்பதற்குள் வாகனம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் வாகனத்தின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் மாட்டிய ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



இதுகுறித்து பகுதி பொதுமக்கள் கூறுகையில், நேற்று இரவு பெய்த கனமழையினால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் சிரமப்பட்டதாகவும், விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இரவு நேரங்களில் விஷபூச்சிகள் வீட்டுக்குள் நுழைந்து கொள்வதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவு முழுவதும் தூங்கமுடியாமல் அவதிப்பட்டதாக தெரிவித்தனர். வீட்டில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து வீணாகிவிட்டதாக வேதனையை வெளிப்படுத்தினர். தண்ணீர் செல்லும் ஓடைகளை அகலப்படுத்தி இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்த நிலையில், சேலத்தாம்பட்டி ஏரியுள்ள சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் ஏரியின் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதை அதிகாரிகள் வெளியேற்றுவது குறித்து கேட்டறிந்தார். 


முன்னதாக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சிவதாபுரம் பகுதிக்கு நேரில் சென்று வீடுகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவது குறித்து மாநகராட்சி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் சிவதாபுரம் பொதுமக்களை நேரில் சந்தித்து உடனடியாக தண்ணீர் வெளியேற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


இவரைத் தொடர்ந்து சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், வீடுகளுக்குள் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றி தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மழை காலம் உள்ளதால் தாழ்வான பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தண்ணீர் தேங்காமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.