சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளருமான மீனா கந்தசாமிக்கு, ஜெர்மன் நாட்டின் ‘Penn' அமைப்பின் உயரிய விருதான 'ஹெர்மன் கெஸ்டன்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
1984ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் மீனா கந்தசாமி. எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இவரின் படைப்புகள் பெண்ணியத்தையும், இந்தியாவின் சமகாலத்திய சாதியொழிப்புப் போராட்டத்தையும் பேசுகின்றன. பாலினம், சாதி, பாலியல், ஆணாதிக்கம் மற்றும் பிராமண அமைப்பு ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஜெர்மனின் PEN என்னும் கூட்டமைப்பால் 1985 ஆண்டு முதல் 'ஹெர்மன் கெஸ்டன்' விருது வழங்கப்படுகிறது. அடக்குமுறைக்கு ஆளாகும் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு எழுத்தாளர் மீனா கந்தசாமிக்கு, 'ஹெர்மன் கெஸ்டன்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
PEN கூட்டமைப்பின் துணைத் தலைவர் கார்னலியா ஸெட்சே எழுத்தாளர் மீனா கந்தசாமி குறித்துக் கூறும்போது, ’’ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் அச்சமின்றிப் போராடும் போராளி மீனா’’ என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆங்கிலத்தில், The Gypsy Goddess (2014), When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife (2017), Ayaankali (2007), Tamil Tigresses (2021), poems including Touch (2006) மற்றும் Ms Militancy (2010) உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார்.
இவரின் நாவல்கள், புனைவு கதைகளுக்கான பெண்கள் பரிசு, சர்வதேச டிலான் தாமஸ் பரிசு, ஜலக் பரிசு மற்றும் இந்து லிட் பரிசு ஆகியவற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.