நாகை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது, 12 மாதத்தில் 10 மாதங்கள் பரபரப்பாக காணப்படும் மீனவ கிராமங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகம் இங்கு மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் மீன்பிடி தொழில் சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வேலை பார்த்து வருகின்றனர், நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரித்த பிறகு நாகை மாவட்டத்தில் மட்டும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், வேளாங்கண்ணி, புஷ்பவனம், ஆற்காட்டுதுறை, கோடியக்கரை என 27 மீனவ கிராமங்கள் உள்ளன, மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அரசுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் மீனவர்களுக்கு சமீபகாலமாக இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்கள்என தொடர்ச்சியாக  அடி மேல் அடி விழுந்து வரும் நிலையில் இந்த மாதத்தில் மட்டும் நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கடற்கொள்ளையர்கள் ஏழுமுறை தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து ஆற்காட்டுத்துறை மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோக நிலையில், நாகையிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்தது பிடிபட்ட சம்பவம் மீனவ கிராமங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சுங்கத் துறையினர், காவல்துறையினர், கடலோர காவல் குழும போலீசார், மத்திய உளவுப்பிரிவு போலீசார், க்யூ பிரிவு போலீசார், மீன்வளத் துறையினர் என கழுகு பார்வையில் அவர்கள் கண்காணித்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாகை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த முயற்சி செய்வது வாடிக்கையாகி வருகிறது, சமீபத்தில் சென்னையில் இருந்து வேதாரணியம் பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கஞ்சா கடத்தி வரும் போது பிடிபட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது, கடத்தல்காரர்கள் கடத்துவதும் பல்வேறு துறையினர் தடுத்து அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதும் கடத்தல்காரர்களுக்கு அச்சம் விலகாமல் கஞ்சா கடத்தலை ஜரூராக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் நாகை  மீன்பிடித் துறைமுகம்  அருகே கீச்சாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக படகில் இலங்கைக்கு  கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.




இதனையடுத்து கடந்த 10 நாட்களாக நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் கீச்சாங்குப்பம் பகுதியில்  சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கீச்சாங்குப்பம் ஆற்று ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த 8 நபர்கள் மீன்பிடி பைபர் படகில் பெரிய அளவிலான பொட்டலங்களை படகின் ஐஸ்பெட்டியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதனைக் கண்ட சுங்கத்துறையினர் அதிரடியாக படகை சுற்றி வலைத்தனர்.  இதனை கண்ட  கடத்தல்காரர்கள்  4 பேர் படகிலிருந்து ஆற்றில் குதித்து தப்பி ஓடினர். மேலும் கரையில் நின்றிருந்த நான்கு நபர்களும் தங்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து படகில் சோதனையிட்ட அதிகாரிகள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். படகில் பத்து பொட்டலங்களில் இருந்த 280 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு இரு சக்கர வாகனம் மற்றும் பைபர் படகையும் கைப்பற்றிய சுங்கத்துறையினர் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகில்  நாகை மீனவன் என்று எழுதப்பட்டிருந்தது.


 


’நாகை மீனவன்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் குணசீலன் என்ற மீனவருக்கு சொந்தமான படகு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சுங்கத் துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டுள்ள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 2 கோடி ரூபாய்க்கு மேல் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கிய காரணமான ஒன்று கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவதால் தான் எனவே அரசு மற்றும் துறை சார்ந்தவர்கள் எவ்வளவுதான் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் சமூக அக்கறை உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் பலதரப்பட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதை தடுப்பதோடு கடத்தல்காரர்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்க முடியும் என தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.