சமூக ஊடகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பிய படமான ‘திரௌபதி’ படத்தை தொடர்ந்து , மோகன் ஜி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷியே ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணம். பொதுவாகவே மோகன் ஜி இயக்கும் படத்தில் சாதிய சாயல் இருக்கும் என்பது சிலரின் கருத்தாக உள்ளது.
முன்னதாக வெளியான திரௌபதி படத்தில் நாடக காதல் என்பதை மையமாக வைத்து , குறிப்பிட்ட சமுதாய மக்களை தாழ்த்திக்காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் படமும் அப்படியான சாயலை ஏற்படுத்தும் என்றே பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டது. அதன்படி பாஜகவின் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலரும் இப்படத்தை பார்த்தனர். படம் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, '' சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. நல்வழிப்படுத்தவும் வேண்டும். உண்மையான ருத்ரதாண்டவத்தை நாங்கள் பார்த்தோம்.
இப்படத்தில் மோகன் ஜி முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். இளம் வயது காதல், போதை கலாசாரம், பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற விவகாரங்களை பேசியுள்ளார். அதாவது 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர,காதலில் இல்லை. அதனை இப்படம் பேசுகிறது. அடுத்து போதைக்கலாசாரம். இன்று கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துவிட்டது. அதற்கான காரணம் போதைக்கலாசாரம். அதனை புரிய வைக்கும் ஒரு படமாக இது இருக்கும். மூன்றாவதாக, பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களை தோலுரித்து காட்டியுள்ளது இப்படம்.
இந்தப்படம் எந்த மதத்தையும், சாதியையும் இழிவாக பேசவில்லை. சமூகத்துக்கு தேவையான நல்ல படமாகவே உள்ளது. சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்னையை சாதி பிரச்னையாக மாற்றுபவர்களை இப்படம் எச்சரித்துள்ளது. இயக்குநர் மோகன் ஜி தேசிய கடமையை செய்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்து இழிவாக பேசியவர்கள் திரையுலகில் இருக்கத்தானே செய்கிறார்கள் என இயக்குநர் பா. ரஞ்சித் குறித்தும் எச்.ராஜா குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக, திரௌபதி படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி குறிப்பிடுகையில் , திரௌபதி படத்தில் தனக்கு கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளார். முன்னதாக படம் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்த இயக்குநர் மோகன், படம் நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரானது அல்ல. எனக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் இடையில் எந்த போரும் கிடையாது. நான் அவருக்கு எதிரானவன் அல்ல எங்களுக்கிடையில் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டிதான் ” என குறிப்பிட்டுள்ளார். ‘ருத்ர தாண்டவம் ‘ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.