அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை பசுமைவழிச்சாலையில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்..,


” எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளது சிறுபிள்ளைதனமானது. திடீர் சாம்பார் ரசம் போன்று தேர்தலை அறிவித்துள்ளனர். அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கட்சியின் சட்ட விதிகளை மாற்றி தேர்தல் அறிவித்துள்ளனர். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். இந்த விஷயத்தை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்.


ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த பாடத்தை கூட அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் காப்பாற்றிய இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி சீர் குலைத்து வருகிறார். இனியும் அவர்கள் திருந்துவார்கள் என்றோ ஒன்றாக சேர்வார்கள் என்று நினைக்கவில்லை நம்பவில்லை. ப்ரேக் இல்லாத வண்டியை போல் அவர்கள் செல்கின்றனர். விரைவில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் குழு மாவட்டங்கள் தோறும் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளோம். உண்மையான அதிமுக தொண்டர்கள் இந்த தேர்தலை புறக்கணியுங்கள்” என கூறினார்.


அந்த செய்தியாளர் சந்திப்பில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கான கட்சி விதிமுறைகளை ஓ பன்னீர்செல்வம் விளக்கினார்.


அப்போது பேசிய ஓபிஎஸ்” எதுவுமே முறைப்படி இல்லாமல் பிக் பாக்கெட் அடிப்பது போல இருக்கிறது அவர்களது செயல்பாடுகள். இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் பொதுக்குழுவை அங்கீகரிக்க வில்லை. மக்களும் தொண்டர்களும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து இருந்திருந்தால் ஈரோடு கிழக்கு தேர்தலில் வென்றிருக்க வேண்டும். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கழகத்தை தோல்வி பெற செய்தவர் எடப்பாடி. அடிப்படை மக்கள் தலைவர்கள்தாம் என்ற கட்சி விதியை மாற்றி மிட்டாதார் மிராசுதார் போல தன்னை சுற்றி உள்ளவர்கள் மட்டும் தலைமை பொறுப்புக்கு வரும் வகையில் விதிகளை மாற்றி உள்ளனர்.  


தொண்டர்கள் கலங்க வேண்டாம். தமிழகத்தில் எடப்பாடி எங்கு சென்றாலும் அவருக்கு எதிராக எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது. அதை அவரே உருவாக்கி கொண்டு இருக்கிறார். தொண்டர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகவில்லை குண்டர்கள் எண்ணிக்கைதான் அதிகம் ஆகி இருக்கின்றனர். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் தமிழகம் தழுவிய அளவில் மாநாடு நடத்தப்படும்”  என கூறினார்.


இந்நிலையில் அதிமுக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.