Helicopter Crash : அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணமடைந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.


உடல் தகனம்


அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்லம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மேஜர் ஜெயந்த் (35) மற்றும் லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் உயிரிழந்தனர். மேஜர் ஜெயந்த் உடல் தனி விமானத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து, அவரது சொந்த ஊரான  தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அமைச்சர் சார்பில் ஐ.பெரியசாமி, ஆட்சியர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்.  இதனை அடுத்து, அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்று முழு ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க  சொந்த ஊரான பெரியகுளத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.


ஹெலிகாப்டர் விபத்து


அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் இருந்தனர்.   இந்த ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு சங்கே என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்தது.


அப்போது அருணாச்சல பிரதேசத்தின்  மண்டாலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.


அப்போது சிறிது நேரம் கழித்து 2 பேரின் உடல்களை மீட்டனர். அதில் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இந்நிலையில், மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 


ஆறுமுகம் என்பவரின் மகனான ஜெயந்த் கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர்ந்து, அதன் பிறகு மேஜராக பணிபுரிந்து வந்தார். ஜெயந்த்தின் மனைவி ஸ்டெல்லா சாராவுடன் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் இவர் உயிரிழந்தது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கிடையில், உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


இரவில் நடைபெற்ற மரியாதை நிகழ்வு.. சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது ராணுவ வீரர் ஜெயந்தின் உடல்..