மணிப்பூரில் இளம்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆடை கலைப்பு பாலியல் வன்கொடுமை மனிதகுலத்திற்கு எதிரானது என்றும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மணிப்பூரில் குகி சோ பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கிய கும்பல், அவர்களை சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டை உலுக்கி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
மனித குலத்திற்கு எதிரானவை
’’கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது. மணிப்பூரில் நடந்த இந்த கொடிய குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை.
மே மாதம் 4-ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு 35 கி.மீ தொலைவில் நடந்த இந்த குற்றங்கள் இப்போது காணொலியாக வெளியாகி இருப்பதன் மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்த குற்றமும் செய்யவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னொரு பிரிவினரால் ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தில் இருந்து தப்பிச் சென்றதுதான் அவர்கள் செய்த குற்றம் ஆகும். இப்படி ஒரு குற்றம் நடந்ததே இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் உலகிற்கு தெரிகிறது என்றால், அங்கு சட்டம் - ஒழுங்கு நிலைமை எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பதை உணரலாம்.
உளவியல் கலந்தாய்வு
மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்த கலவரம் உடனடியாக கட்டுப்படுத்தப் படாததுதான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைவதற்கு காரணம் ஆகும். இதற்கு காரணமாக குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் அச்சம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்க உளவியல் கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.