அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து செல்லும் மக்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே, மஞ்சள் காய்ச்சல் நோய் பரவலை தடுக்க இந்தியாவிலிருந்து அந்நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஒருவருக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பத்து நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர். இது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் விவரங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்த விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/index.php என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 


தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள 3 மஞ்கள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி மையங்களில் கீழ்காணும் ஆவணங்களை கொண்டு பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.



  1. அசல் கடவுச்சீட்டு

  2. சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு

  3. மருத்துவ விவரங்கள் (ஏதேனும் இருப்பின்)


பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம், கிண்டி, சென்ன. அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான பதிவுகளை நேரடியாக தினமும் காலை 9.30 முதல் 10.00 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் www.kipmr.org.in என்ற முகவரியில் 24 x 7 தடுப்பூசி பதிவு செய்யலாம். தாமதமாக வரும் பயனாளிகளுக்கு தடுப்பூசி இருப்பை பொறுத்து தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிகளுக்கான கட்டணம் ரூபாய்.300/- செலுத்த வேண்டும்.


துறைமுக சுகாதார நிறுவனம், இராஜாஜி சாலை, சென்னை. அனைத்து திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான பதிவுகளை நேரடியாக தினமும் காலை 8.00 முதல் 09.00 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் porthealthofficechennai@gmail.com என்ற முகவரியில் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தடுப்பூசிகளுக்கு பதிவு செய்யலாம்.


துறைமுக சுகாதார அதிகாரி, துறைமுக சுகாதார அமைப்பு எண்.பி-20, உலக வர்த்தக அவென்யூ, புதிய துறைமுகம், தூத்துக்குடி. அனைத்து செவ்வாய் கிழமைகளில் காலை 11 மணி முதல் 1.00 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான பதிவுகளை நேரடியாக மட்டும் தினமும் காலை 10.00 முதல் 11.00 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தாமதமாக வரும் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் நாட்களில் 12.00 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.


எனவே, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளவர்கள், மேற்கண்ட இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி, தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்று, பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த அரசு/தனியார் மருத்துவமனைகளிலும் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என தெரிவித்து கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.