பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியானது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணாக்கருக்கு, கடந்த மார்ச் 4 முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 25 ஆயிரத்து 187 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 945 பேரும் சிறைவாசிகள் 187 பேரும் தேர்வெழுதினர்.


விழுப்புரம் மாவட்டம் 


விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10,735 பேரும் மாணவிகள் 11,229 பேரும் ஆக மொத்தம் 21,964 பேர் தேர்வு எழுதி 89.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 26 வது இடத்தினை பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87.06% பெற்றுள்ளது. மாநில அளவில் அரசு பள்ளி 18-வது இடம் பெற்றுள்ளது.


சென்ற 2022-2023 கல்வியாண்டில் 84.51 சதவீதம் பெற்று விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 35-வது இடத்தில் இருந்து தற்போது 4.29 சதவீதம் உயர்ந்து 89.41 சதவீதம் பெற்று மாநில அளவில் 26-வது இடத்தினை பெற்றுள்ளது.


தேர்ச்சி சதவீதம் கூடியதற்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, காலை, மாலை சிறப்பு வகுப்புகள், மெல்ல கற்போருக்கு சிறப்பு பயிற்சி அளித்தது. பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைத்ததும் முக்கிய காரணமாகும். 


தேர்வு முடிவு வெளியீடு 


இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, என்ற இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அளித்த அலைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.