தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


கொரோனா தொற்று 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பரவத்தொடங்கியது. முதல் அலை, இரண்டாம் அலை என இந்தியாவை புரட்டிப்போட்டது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் மார்ச் மாதம் முதல் தொற்று அதிகரித்து வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்தில் கொரோனா புதிய உச்சம் தொட்டது.


தற்போது இந்தியாவில் தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் புதிதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 25,587 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டை பொறுத்தவரை தினசரி தொற்று பாதிப்பு 200 ஐ கடந்து பதிவாகியுள்ளது. கடந்த மாதம் 100 க்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 200 ஐ கடந்து பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 242 பேர் புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1216 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 373 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதன்காரணமாக தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி மதத்தில் 50க்கு குறைவாக இருந்த தொற்று தற்போது 1216 பேராக உயர்ந்துள்ளது.


இதேபோல் தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதமும் 0.6 இருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர் (12.8%), கோயம்புத்தூர் (10.6%), காஞ்சிபுரம் (9.3%), கரூர் (7.8%), ஈரோடு (7.7), தூத்துக்குடி (7.1%), சென்னை (6.4%), திருவாரூர் (06%), மதுரை (5.8%) மற்றும் கடலூரில்(5.4%) கொரோனா உறுதி செய்யப்படுவோர் சதவீதம் உயர்ந்துள்ளது.


எனவே, தற்போது மாநிலம் முழுவதும் 3000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை 11 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மாவட்டம் தோறும் மக்கள் தொகை ஏற்ப பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.