ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. வந்தாரை வாழவைக்குமாம் சென்னை நகரம் தனது 384 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. 


இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்த போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடாகாமாவிற்குப் பிறகு, டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் வந்து சேர்ந்தனர். அப்போது வணிகம் செய்ய எதற்கும் பயன்படாமல் இருந்த இடத்தை வாங்கிக் கொண்ட ஆங்கிலேயர்கள் 1940ல் ஜார்ஜ் கோட்டையை கட்டத்தொடங்கினார். அசுர வேகத்தில் ஒரு ஆண்டிற்குள்ளாக கோட்டையை கட்டினர் ஆங்கிலேயர்கள். பிரபலமாக இருந்த கிருஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் என்பவரது பெயரால் புனித ஜார்ஜ் கோட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த கோட்டையைக் கட்டுவதற்கு பிரான்ஸிஸ் டே அதிகம் செலவு செய்திருக்கிறார். இந்த கோட்டையில் தங்கி தான் அனைத்து ஆங்கிலேயர்களும் வணிகம் செய்திருக்கின்றனர்.  கோட்டை இந்த பகுதிக்கு வரவும் இந்த பகுதியில் மக்கள் குடியேற்றம் அதிகமாக, இதற்கு மதராஸ் பட்டணம் என்று பெயரிட்டுக்கொண்டனர். சிலர் சென்னப்பட்டணம் என்று பெயரிட்டுக்கொண்டனர். இப்படி பல்வேறு வரலாறுகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான் சென்னை. இன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, கல்வி, தொலைதொடர்பு, பாரம்பரியம், கலாச்சாரம் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. 






இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பகுதியில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்! கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை? சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'!” என குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமின்றி இந்தநிலையில், சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் 384வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பள்ளி மாணவர்களின் "அக்கம் பக்கம்" புகைப்படக் கண்காட்சியையும், ஆவணப் புகைப்பட காட்சியையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்கள், புகழ்பெற்ற இடங்கள் ஆகியவை இந்த புகைப்பட கண்காட்சியில்  இடம்பெற்றது.


Madras Day 2023: வந்தாரை வாழவைக்குமாம்.. அனைவரையும் அரவணைக்குமாம்.. இன்று 384-வது சென்னை தின கொண்டாட்டம்..