வந்தாரை வாழவைக்குமாம் சென்னை நகரம் தனது 384வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. வந்தாரை வாழவைக்குமாம் சென்னை என்பது ஏதோ சில பத்தாண்டுகளுக்கு முன்பாக வந்ததல்ல. இந்த மண்ணுக்குச் சொந்தமில்லாதவர்களையே வாழவைத்த மண் இது. அதனால்தான் இந்த சென்னையின் வரலாற்றில் பல்வேறு நாடு, இன, மொழிகளைச் சேர்ந்தவர்களும் புதைந்திருக்கிறார்கள். இந்த சென்னை என்பது தானாக உருவானது அல்ல பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினரால் உருவாக்கப்பட்டது. 


இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்த போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடாகாமாவிற்குப் பிறகு, டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் வந்து சேர்ந்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது மற்றவர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவர்களால் பெரிய அளவில் வியாபாரத்தில் ஈடுபடமுடியவில்லை. முக்கிய வணிக மையமாக விளங்கிய மசூலிப்பட்டிணம் துறைமுகத்தைப் பகிர்ந்துகொள்வதில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.


இதனால் வேறு துறைமுகத்தைத் தேடிய ஆங்கிலேயர்களுக்கு துகராஜபட்டணம் என்ற ஒரு இடம் கிடைத்தது. ஆனால், இங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் டச்சுக்காரர்களின் ஆளுமைக்குட்பட்ட பழவேற்காடு இருந்தது. அதனால், டச்சுக்காரர்கள் தொல்லை கொடுக்க அந்த இடத்தையும் விட்டுவிட்டு வேறு இடத்தைத் தேடினர். அதன்பிறகு வந்து சேர்ந்த இடம்தான் சென்னை. அப்போது சென்னை சந்திரகிரி அரசனின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இந்த அரசனுடைய அதிகாரத்தின் கீழ் பூந்தமல்லியை ஆண்டு கொண்டிருந்த ஒரு அரசனிடம் நட்பாகப் பழகி  ஆங்கிலேயர்கள் வசிக்க ஒரு இடமும், அங்கு ஒரு கோட்டையையும் கட்டிக்கொள்ள அனுமதியும் பெற்றார்கள். இந்த வேலையைச் செய்து முடித்தது பிரான்ஸிஸ் டே என்னும் ஆங்கிலேயன்தான்.


சென்னைக்கு அனுமதி பெறப்பட்ட 1639 ஆகஸ்ட் 22ம் தேதியே சென்னை தினமானது. ஆங்கிலேயர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் செழிப்பில்லாதது. சதுப்பு நிலம் வேறு. எதற்கும் பயன்படாமல் இருந்த இடத்தை வாங்கிக் கொண்ட பிரான்ஸிஸ் டே 1940ல் ஜார்ஜ் கோட்டையை கட்டத்தொடங்கினார். அசுர வேகத்தில் ஒரு ஆண்டிற்குள்ளாக கோட்டையை கட்டினர் ஆங்கிலேயர்கள். பிரபலமாக இருந்த கிருஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் என்பவரது பெயரால் புனித ஜார்ஜ் கோட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த கோட்டையைக் கட்டுவதற்கு பிரான்ஸிஸ் டே அதிகம் செலவு செய்திருக்கிறார். இங்கிலாந்திலும் டேவை கடிந்துகொண்டிருந்திருக்கிறார்கள்  மிகப்பெரிய வரலாற்றிற்கு அடித்தளத்தை டே போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது அறியாமல். இந்த கோட்டையில் தங்கி தான் அனைத்து ஆங்கிலேயர்களும் வணிகம் செய்திருக்கின்றனர். 


கோட்டை இந்த பகுதிக்கு வரவும் இந்த பகுதியில் மக்கள் குடியேற்றம் அதிகமாக இதற்கு மதராஸ் பட்டணம் என்று பெயரிட்டுக்கொண்டனர். சிலர் சென்னப்பட்டணம் என்று பெயரிட்டுக்கொண்டனர். சந்திரகிரி அரசனின் கீழ் அதிகாரம் செலுத்திய நாயக்கர் ஒருவரின் தகப்பன். அந்த நாயக்கன் தான் ஆங்கிலேயருக்கு நிலத்தைக் கொடுத்தவன் என்பதால் அந்த பெயரையே பயன்படுத்திக்கொண்டனர். 


மதராஸ் என்ற பெயருக்கு ஒரு காரணமும் கூறுகிறார்கள். கோட்டைக்கு அருகில் ஒரு சேரி இருந்திருக்கிறது. அதற்கு மதரஸன் என்ற கிருஸ்தவர் தலைவராக இருந்திருக்கிறார். புதிதாக உருவாகியிருக்கும் பட்டணத்திற்கு தன் பெயரை வைக்கும் படி பிரான்ஸிஸ் டேவை கேட்டுக்கொண்டாராம். அதனால் மதராஸ் பட்டணம் என்று கூறத்தொடங்கினர் என்றும் கூறப்படுகிறது. மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. சாந்தோம் பகுதியில் மதீரஸ் என்ற போர்த்து கீச வர்த்தகர் பிரபலமாக இருந்திருக்கிறார். இதனால் அந்தபெயரே மதராஸ் என்று மருவியிருக்கலாம் என்று கூறுகின்றனர். சென்னைப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த சந்திரகிரி அரசனுக்கு ஸ்ரீரங்கராயர் என்று பெயர். தன் பெயரை இந்த பட்டணத்திற்கு வைத்து ஸ்ரீரங்கராய பட்டணம் என்று அழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார். ஆனால் சென்னப்பட்டணம் என்றும் மதராஸ் பட்டணம் என்றுமே அழைத்திருக்கின்றனர். தற்போது நாம் பார்க்கும் ஜார்ஜ் கோட்டை ஆரம்பத்தில் கட்டப்பட்ட கோட்டையல்ல. அந்த கோட்டையை முகலாயர்கள், போர்ச்சுகீசியர்களுக்கு பயந்து பல்வேறு காலகட்டங்களில் இடித்து சீரமைத்து வலுப்படுத்திக் கட்டியது தான்.


நகரை நிர்வகிக்க மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷனை உருவாக்கி அதுசார்ந்த அலுவல்களுக்கு ரிப்பன் மாளிகையையும் கட்டினர். அவர்களே நகர பரிபாலன சங்கம் ஒன்றை ஏற்படுத்தி அந்த சங்க உறுப்பினரை நகரவாசிகள் தேர்ந்தெடுக்கும் படி செய்தனர். இந்த நகர பரிபாலன சங்கத்தின் தலைவரை மேயர் என்று அழைத்தனர். இவர்களது கீழ்தான் நகரை சுத்தம் செய்வது, சிறுவழக்குகளை விசாரிப்பது, சிறு குற்றங்களுக்கு தண்டனை விதிப்பது, மக்களிடம் வரி வசூல் செய்வது போன்ற அதிகாரங்கள் இருந்தது. அதே நேரம் நகரில் குழந்தை பிறந்தாலும், யாராவது இறந்தாலும்பதிவு செய்யவேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டது.


பட்டணம் வளர வளர் திருட்டு அதிகமானது. பாதுகாப்புக்காக காவல்துறையை ஏற்படுத்தினர். அவர்களது தலைவனுக்கு பெத்த நாயக்கன் என்று பெயரிட்டு அழைத்தனர். இதன் பொருள் தலைமை வீரன் என்பதாகும். 



சென்னை நகரில் ஆரம்பத்தில் இருந்தது மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, புரசைபாக்கம், பிரம்பூர், எழும்பூர், இராயபுரம், சாந்தோம் ஆகிய ஊர்கள் தான். இங்கு மக்கள் தொகை அதிகமாகவே, இந்த கிராமங்களைச் சுற்றியிருந்த, நுங்கம்பாக்கம், அடையாறு, சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் மக்கள் குடியேற இந்த இடங்களும் பின்னாளில் சென்னையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்த இடங்களிலும் மக்கள் தொகை அதிகமாகவே சைதாப்பேட்டை, அதற்கு அருகில் இருந்த மாம்பலம், சென்னைக்கு வடக்கே உள்ள திருவொற்றியூர், பிரம்பூருக்கு அடுத்துள்ள வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் குடியேறினர்.


சென்னை உருவாக்கப்பட்டதும் உருவான கறுப்பர் நகரம் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜ் டவுனில் தான் அதிக மக்கள் வசித்தனர். அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருலட்சம் பேர் என்ற அளவில் வசித்திருக்கின்றனர். இதற்கு அடுத்து திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் மக்கள் அதிகம் வசித்திருக்கின்றனர். பிரம்பூர் மற்றும் சூளை ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் நிறைய இருந்த படியால் அந்த பகுதியிலும் மக்கள் தொகை அதிகமாக காணப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்னை மக்களை கணக்கெடுக்கும் வழக்கம் இருந்தது. அதன்படி 1930களில் சென்னையின் மக்கள் தொகை சுமார் ஐந்தேகால் லட்சம் தான்.


சென்னையில் இருந்தவர்களில், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் பெரும்பான்மையாக இருக்க இவர்கள் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், கூர்ஜ்ஜரம் மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தொழில் நிமித்தமாக சென்னையில் குடியேறியிருந்தனர். அவர்களில் மார்வாடி மற்றும் கூர்ஜ்ஜரர் ஆகியோர் ஜார்ஜ் டவுனின் ஒரு பகுதியான சவுக்கார் பேட்டையில் குடியேறினர்.



இப்போது சொல்லப்படும் பேஸின் பிரிட்ஜ் என்ற ரயில்வே ஸ்டேஷன் உள்ளதே அங்கு தான் மின்சாரம் தயாரிக்கப்படும் பெரிய தொழிற்சாலை இருந்தது. சென்னைக்கு மின்சாரம் வழங்கியது இந்த தொழிற்சாலைதான். சென்னையில் ஓடிய ட்ராம் வண்டிகளுக்கு மின்சாரம் எழும்பூரில் இருந்த மற்றொரு தொழிற்சாலையில் தயாரித்தார்கள்.


சென்னையில் முக்கிய வணிகப் போக்குவரத்தாக துறைமுகம் பகுதி விளங்கியது. இங்கிருந்து தான் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் சென்னையில் இருந்து தஞ்சாவூர் மற்றும் திருச்சி, வடக்கில் கொல்கத்தா, வடமேற்கில் கடப்பை, பம்பாய், மேற்கில் பங்களூரு, கோயமுத்தூர், நீலகிரி போன்ற இடங்களுக்கும் இருப்புப்பாதைகள் மூலம் போக்குவரத்து நடைபெற்றது. இந்த இருப்புப்பாதை போக்குவரத்தை இரண்டு பெரிய நிறுவனங்கள் நிர்வகித்துவந்தன. வடக்கு, வடமேற்கு, மேற்கு பகுதிகளில் செல்லும் இருப்புப் பாதைகளை மதராஸ் தென் மராட்டிய ரயில்வே கம்பெனி என்ற நிறுவனமும், தெற்கேப் போகும் பாதையை தென்னிந்தியா ரயில்வே கம்பெனி என்ற நிறுவனமும் நிர்வகித்துவந்தன. ஆங்கிலேயர்கள் நாணயங்கள் தயாரிப்பதற்காக மிண்ட் என்ற பகுதியை உருவாக்கினார்கள். அந்த இடத்தில் தங்கம், வெள்ளி ஆகிய உலோககங்கள் உருக்கப்பட்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. மிண்ட் பகுதியில் இப்போதும் பல உருக்கு தொழிற்சாலைகள் செயல்படுவதை பார்க்கலாம்.


மதராஸ் தென் மராட்டிய ரயில்வே கம்பெனியின் ரயில்கள் வந்து சேருமிடத்திற்கு செண்ட்ரல் ஸ்டேஷன் என்று பெயரிடப்பட்டிருந்தது. தென்பகுதிக்கு சென்ற ரயில்கள் வந்து சேருமிடம் எழும்பூராக இருந்தது. இப்போதும் அப்படியே தான் இந்த ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன.


இவைகள் மட்டுமல்லாமல் சென்னையின் ஒவ்வொரு தெருவுக்குப் பின்னாலும் ஒவ்வொரு பகுதிக்குப் பின்னாலும் ஒவ்வொரு கட்டிடத்திற்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. பலரால் கட்டமைக்கப்பட முயன்ற நகரங்கள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் தப்பிப்பிழைத்தது சில நகரங்களே. அதில் முக்கியத்துவம் வாய்ந்தது சென்னை. இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது. இந்திய அளவில் அரசியலை தீர்மானிக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது சென்னை. உலக அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த நகராக விளங்குகிறது சென்னை. சென்னையின் மக்கள் தொகை ஒரு நூற்றாண்டில் கோடிகளைத் தொட்டிருக்கிறது. பல தரப்பு மக்களால் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட இந்த சென்னைப்பட்டணம் என்பது வெறும் பெயர் அல்ல வரலாறு.