எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் ஆவார் என்ற ராஜேந்திரபாலாஜி கருத்துக்கு பெரும் சிரிப்புதான் எனது பதில், பொறுப்புள்ள பதவி, மற்றவர்களுக்கு ஆசை இருக்கலாம் அதற்கு நான் பதிவு கூற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவையில் விமான நிலையத்தில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:  ”திருச்சியில் பேசும் போது ஆளுநர் எழுப்பி கேள்விகள் மிக முக்கியமான கேள்வி, தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் மறைக்கப்பட்டதாக ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை.


அப்படி இல்லை என்றால் திமுக அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும்.


டி.ஆர்.பாலு ஆளுநரை ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும், இதனை வன்மையாக கண்டிக்கிறேன். கோட்சேவை யாரும் தூக்கி பிடிப்பது கிடையாது, பிடிக்கவும் கூடாது அவர் தவறு செய்துள்ளார் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கோட்சேவை பொறுத்தவறை மகாத்மா காந்தி விவகாரத்தில் யாரும் ஏற்றுகொள்ளப்போவது கிடையாது. கொள்கை ரீதியான கருத்தை சொன்னாலும் ஏற்றுக்கொள்வது கிடையாது. வீரலட்சுமி யார் என எனக்கு தெரியாது. கோவில்பட்டி வீரலட்சுமி தான் தெரியும். யார் வேண்டுமானாலும் ஊழல் பட்டியலை வெளியிடலாம்.


நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்க்கு செல்ல வேண்டும். 50 லட்சம் கையெழுத்து வாங்கி என்ன நடக்க போகிறது? ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக கூறும் திமுகவினால், 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை என்றால் திமுக கட்சியை இழுத்து மூடி விடலாம். நீட் தேர்வை அனைவரும் ஏற்று கொண்டுள்ளனர். நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்ற ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு நான் எந்த கருத்து சொல்ல விரும்பவில்லை. வெறும் சிரிப்பு தான் எனது கருத்து.  இன்று பிரதமர் பதவி எந்த அளவுக்கு ஆகிவிட்டது என்று தான் பார்க்கிறேன். முக்கிய பொறுப்புள்ள பதவி, மற்றவர்களுக்கு கனவு இருக்கலாம் அதற்கு நான் கருத்து சொன்னால் தவறாக போய்விடும். தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும்.  பாஜகவில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான்


பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார். ஆரியம், திராவிடயம் என்பது ஒரு குப்பை. அதற்கு சரியான இடம் குப்பை தொட்டி. திராவிடம் என்பது என்ன என திமுகவினருக்கே தெரியாது


அது முட்டாள்தனமான பொய்யான வாதம். திராவிட மாடல் என முதல்வர் ஊரை ஏமாற்றி கொண்டிருக்கிறார். யார் ஆரியர்? இந்தியாவில் யாரும் ஆரியர் இல்லை இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் ஆரியரா? ஆரியர் எதிரி என்றால், I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.


கெளதமியை நேற்று சந்தித்தேன். அவர் எனக்கு நண்பர். பிரச்சனை எதுவும் இல்லை. கட்சி சார்பில் அவரது மனக்குமுறலை கேட்டேன். அவருக்கு உதவி செய்ய முடியும் என்றால் செய்வேன். மற்ற கட்சி பற்றி கமெண்ட் பண்ண மாட்டேன். அது எனக்கு நேர விரயம். நான் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர். நான் யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது முக்கியம். கேள்வி கேட்பவர்களுக்கு தகுதி இருக்க வேண்டும்.  கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கு திமுகவும், ஸ்டாலினும்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்த பிறகு, உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.