எத்தனை தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருக்கிறார்களோ அத்தனை தேர்வுகளுக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, அரியர் கய்ஸ் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அளவிற்கு கோலாகலக் கொண்டாட்டமானது. ஒன்றல்ல இரண்டல்ல.. 40 தாள்கள்வரை ஒரே ஸ்ட்ரெச்சில் கிளியர் செய்த மாணவர்கள் முதலமைச்சரை கடவுளாகக் கும்பிடவே தொடங்கினர். இறுதியாண்டு தாள்களில் அரியர் வைத்திருந்தால் மட்டும் தேர்ச்சி வழங்கப்படாது எனக் கூறப்பட்டது.
அரியர் மாணவர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாகி இருக்கலாம். ஆனால், கல்லூரி ஆசிரியர்களுக்கும், பல கல்வியாளர்களுக்கும் இது பேரிடியாகவே இருந்தது. பொறுப்பாக படித்து பட்டம் பெறும் மாணவர்களுக்கும், பல பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரே பட்டம் வழங்குவது கல்வித் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகளோடு கொதித்தனர்.
உண்மையில் இத்தகைய கோரிக்கை மாணவர்கள் தரப்பிலிருந்தோ, சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்தோ முன்வைக்கப்படவே இல்லை. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித்தேர்வர்கள் எழுத வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டபோது, நோய் தொற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், அதனை பரிசீலனைக்குக் கூட அரசு எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அவ்வளவு அச்சத்திற்கு இடையில் தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வை எதிர்கொண்டனர் மாற்றுத் திறனாளி மாணவர்கள். ஆனால், எந்தக் கோரிக்கையும் இன்றி பம்பர் ஆஃபர் போல அரியர் தேர்வுகள் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
சரி… இந்த பம்பர் ஆஃபரை மாணவர்கள் அனுபவிக்க முடிந்ததா? இந்தக் கேள்வியிலிருந்துதான் தொடங்குகிறது மாணவர்களுக்கான மன உளைச்சல்.
அரியர் தேர்வு ரத்து அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான பல ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தங்களது ஆதங்கங்களை பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, தமது ஆதங்கத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கழக தலைவரிடம் தெரிவித்துவிட்டார்.
அப்போதுதான், தமிழக அரசின் பம்பர் ஆஃபர் மீது முதல் பட்டாசு வீசப்பட்டது. இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள இயலாது என ஏ.ஐ.சி.டி.இ தலைவர் அனில் சகஸ்ரபுதே பதில் தெரிவிக்க, அது அரசியல் பிரச்னையாக உருவெடுத்தது. தமிழக அரசின் முடிவை, மத்திய அரசு அமைப்பிடம் கருத்து கேட்பதற்கு இவர் யார் என மொத்த கோபமும் சூரப்பா மீது திரும்பியது. ஏற்கனவே, தமிழக அரசுக்கும், சூரப்பாவுக்கும் இடையிலான விரிசல் மேலும் விரிவடைந்தது.
ஏன் பொறியியல் படிப்பில் மட்டும் இந்த சிக்கல் கூடுதலானது என்றால்?
அங்கு அரியர்களின் எண்ணிக்கை அதிகம். 2020ஆம் ஆண்டு நிலவரப்படி பொறியியலில் மட்டும் 4 லட்சத்து ஆயிரத்து 226 மாணவர்கள் அரியர் வைத்திருந்தனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பு மூலம் 2 லட்சம் பேர் அரியர்களை கிளியர் செய்யாமலேயே பட்டம் பெறக் கூடிய சூழல் உருவானது. அரியர் கிளியர் ஆகும் மாணவர்களில் ஒருவர் மொத்தமுள்ள 68 தாள்களில் 61 பாடங்களில் அரியர் வைத்திருந்ததாக வேதனை தெரிவித்திருந்தார் ஒரு ஆசிரியர்.
அரியர் ரத்தாவதால் பலன் பெறும் பொறியியல் மாணவர்கள்
அரியர் வைத்திருந்த மொத்த மாணவர்கள் – 4 லட்சத்து ஆயிரத்து 226
ரத்தால் பட்டம் பெற தகுதி பெற இருந்தவர்கள் – 2 லட்சம்
ஏற்கனவே கல்லூரி முடித்தது பலன் பெற இருந்தவர்கள் – 1 லட்சம்
கிளியர் செய்யும் வாய்ப்புகள் முடிந்து, பலன் பெற இருந்தோர் – 10,000”
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராஜ்குமார் ஆதித்யன் அரியர் தேர்வு ரத்து சார்ந்த அரசாணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததன் மூலம், இவ்விவகாரம் நீதிமன்றத்தின் வசம் சென்றது. வழக்கு நடந்துகொண்டிருந்த போதே அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள். இதனை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், அரியர் தாள்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு இடைக்கால தடை விதித்தது.
கொரோனா காலம் தொடங்கியபோதே கல்லூரி தேர்வுகளுக்கென்று இரண்டு முறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு. யூ.ஜி.சி-யின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளையே ஏ.ஐ.சி.டி.இ உள்ளிட்ட அமைப்புகளும் பின்பற்றின. அந்த நெறிமுறைகளில் அரியர் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு தனது வாதத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை என்றே நீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால், நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்தனர்.
(Image of UGC’s guidelines released on April 29,2020)
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், ஆசிரியர் பல்கலைக்கழகம் தவிர இதர பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு அரசாணையை ஏற்றுக் கொண்டுவிட்டதாக தமிழக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் பல மாணவர்கள், தங்களது மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்வதற்காக துணைத் தேர்வுகளையும் எழுதிவிட்டதாக தமிழக அரசு கூறியது.
”அரியர் ரத்தால் பலன் பெற்ற மாணவர்கள்
சென்னை பல்கலைக்கழகம் - 1,09,518
பாரதிதாசன் பல்கலைக்கழகம் - 40,675
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - 50,969”
சமீபத்திய விசாரணையில் அரியர் தேர்வு ரத்து அறிவிப்பு அரசியல் ரீதியிலான முடிவு எனக் கூறியிருக்கிறது தலைமை நீதிபதி அமர்வு. அரியர் ரத்து அறிவிப்பு வெளியான போது நிரந்தர முதல்வரே என சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த முதல்முறை வாக்காளர்களின் மீம்ஸ்கள், அரசியல் நகர்வு தானோ என அனைவரையுமே சிந்திக்கத் தூண்டியதை மறுப்பதற்கில்லை. எப்படியாவது அரியர்களை கிளியர் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்களையும், ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்டு அரசே மடைமாற்றிவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
வேறு வகைகளில் தேர்வை நடத்த முடியுமா என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு யூ.ஜி.சி-யும், தமிழக அரசும் என்ன பதிலளிக்கிறார்களோ, அதுதான் தமிழக அரசின் அட்டகாச அறிவிப்பு மாணவர்களை பட்டாசு வெடிக்கச் செய்யுமா? அல்லது உச்சகட்ட மன உளைச்சலுக்குக் கொண்டு செல்லுமா என்ற கேள்விகளுக்கும் பதிலாகும்.
கட்டுரை : கார்த்தி, கல்வியாளர்