அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Continues below advertisement

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும், சிதிலமடைந்த பல கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement

அனைத்துலக முத்தமிழ் முருகன்  மாநாடு:

தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் திகழ்வது பழனி. பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

காலை 9 மணியளவில் இந்த மாநாட்டை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாட்டை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் சிறப்புரை ஆற்ற உள்ளார். இன்றும், நாளையும் நடைபெறும் இந்த அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாடு பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் பங்கேற்பு:

இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உலகம் முழுவதும் உள்ள சமய சான்றோர்கள். முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள், முருக பக்தர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ்பேசும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகனின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர்கள், சமயச் சொற்பொழிவாளர், திருப்பபணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்கு தொண்டு புரிந்தவர்கள். ஆன்மீக இலக்கிய படைப்பாளிகள் ஆகியோருக்கு முருக வழிபாட்டுச் சான்றோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைகளுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

பல நாடுகளில் இருந்து குவியும் பக்தர்கள்:

உலகெங்கும் நிலவும் முருக வழிபாடு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன், சங்க இலக்கியங்களில் சேயோன் மற்றும் முருகன் இலக்கியங்களில் வழிபாடு, கல்வெட்டுகளில் முருகவேள், வேத மரபிலும், தமிழ் மரபிலும் முருக வழிபாடு, சித்தர்கள் தலைவன் செந்தமிழ் முருகன், நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு, சேய்த் தொண்டர் புராணம் மற்றும் பல்வேறு இலக்கியங்களில் முருகனடியார்கள், வடமொழி இலக்கியங்களில் தென்தமிழ் முருகன், முருகனும் முத்தமிழும், முருகன் அடியார்கள் பலர் குறித்த முக்கியத் தகவல்கள், செய்திகள், திருப்பணிகள் போன்றவை ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரிசீயஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் முருகன் கோயில்கள் உள்ளது. இதனால், அங்கிருந்தும் ஏராளமான முருக பக்தர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவதால் பழனி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement