திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பு வகிப்பவர் வருண்குமார் ஐ.பி.எஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பதவி வகித்து வருகிறார். சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் எதிராகவும் இணையத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பபப்பட்டு வந்தது. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தானும், தனது மனைவியும் இணைய உரையாடல்களில் இருந்து விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில்,


“அனைவருக்கும் வணக்கம். நான் வருண்குமார் வீரசேகரன் ஐ.பி.எஸ். பல் மருத்துவருக்கான படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறை மேல் உள்ள பற்று காரணமாக 2010-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. குடிமைப்பணிகள் தேர்வு எழுதினேன். அதில், அகில இந்திய அளவில் 3-ம் இடத்தை பிடித்திருந்தாலும், ஐ.பி.எஸ்.ஐ தேர்ந்தெடுத்தேன். 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதிதீவிரப்படை, சென்னையிலும் பணிபுரிந்தேன்.


உயர் அதிகாரிகளிடம் பாராட்டு:


பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று குடிமைபொருள் நுண்ணறிவு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னையில் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை மண்டலம் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளேன்.


தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஒரு வருடமாக பணிபுரிகிறேன். எனது 13 ஆண்டுகால ஐபிஎஸ் வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிலும் மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து outstanding rating இதுவரை பெற்றுள்ளேன். இன்று ஒரு மாவட்ட பொறுப்பில் இருந்தாலும்கூட, இராமநாதபுரத்தில் ஒரு எளிமையான பின்னணியில் இருந்து வந்தவன்.


தொடங்கியது எங்கே?


நான். எனது தகப்பனார் வழி தாத்தா ஒரு தபால் காரராக பணிபுரிந்தார். எனது தாய்வழி தாத்தா திருச்சியில் விவசாய விதை வியாபாரம் செய்து வந்தார். இப்பேர்ப்பட்ட சாமானிய சூழலிலிருந்து வந்த நான் பெண்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் போன்ற 2 சாமானியர்களின் பிரச்சனைகளைப் போக்க வேண்டும் என்று தீவிர முனைப்பில் செயலாற்றி வருகிறேன்.


2021-ம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த யூடியூபரை கைது செய்து, பிரச்சனையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.


ஆபாச, அருவருப்பான கருத்துக்கள்:


சமீபத்தில், அதே யூ டியூபர் பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த யூ டியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார்.


அது விமர்சனைத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice  என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன். நான் சட்டப்படி இந்த நோட்டீஸ் அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னைத் தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னைச் சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.


சைபர் கிரைம் வழக்குகள்:


என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் 3 புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது.  இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. அதிலும் பல போலி கணக்குகள் அந்த கட்சியின் தூண்டுதலின் காரணத்தினாலேயே வெளிநாடுகளில் வாழும் தமிழ் தெரிந்த நபர்களுக்கு பணம் கொடுத்து ஆபாச பதிவுகளை பதிவிட உத்தரவிட்டதாக தெரியவருகிறது.


நான் இந்த விசயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு cyber crime wing போலீசார் இதனை விசாரித்து வருகிறார்கள். நானும் எனது மனைவி மரியாதைக்குரிய வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்.-ம் தமிழ்நாட்டில் மத்திய காவல் மண்டலத்தில் முக்கியமான இரு மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை) காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிகிறோம்.


நாங்களும் சாதாரண மனிதர்கள்தான்:


இந்த சவாலான பணியில் நேர்மையாகக் கடமையாற்றினால் மக்களின் நன்மதிப்புகளோடு ஒருசிலரின் பகையையும் சம்பாரிக்க நேரிடும் என்பதை நாங்கள் அறிவோம். பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல.


என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள்தான். ஒரு சாதாரண தகப்பன் மற்றும் தாயாக இது எங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் ஓரு அளவிற்கு பாதித்துள்ளது. நிஜவாழ்வில் பலரை எதிர்கொள்ளும் சூழலில் இந்த இணையக் கூலிப்படையை எதிர்கொள்வது எங்களுக்கு பொருட்டல்ல.


இணைய உரையாடல்களில் இருந்து விலகல்:


ஆனால், ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம்.


எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும் நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை. போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும்.


எங்கள் கையில் உள்ள பொறுப்பு, மக்கள் எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, நாங்கள் மேற்கொண்டு வரும் பணியின் பொருட்டு இதுபோன்ற குறுக்கீடுகளைப் புறந்தள்ளுகிறோம். முகம் தெரியாத கோழைகளுக்கும் இணையக் கூலிப்படைகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை. ஒரு காவல்துறை அதிகாரியாக நான் எனது கடமையை செய்ததற்கு எனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைத் தாக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?


தகுந்த பாடம் புகட்டுவேன்:


அது என்னை நேரடியாகவோ சட்டரீதியாகவோ எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். அதேநேரத்தில், ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும், அறச்சீற்றமும் கொள்கிறேன்.


ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்? இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.


இது சம்பந்தமாக சைபர் கிரைமில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையும், கைது நடவடிக்கையும் தொடரும்.  இதில் ஈடுபட்ட நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தருவது உறுதி. ஒரு குடும்ப நபராகவும் காவல் அதிகாரியாகவும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் சமூக விரோத கும்பல்களின் செயற்பாட்டை முறியடிப்பது எனது கடமை. இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் சாமானிய மக்கள் எந்தவித அச்சத்திற்கும் ஆட்படாமல் தானாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


வருங்கால செயல் திட்டம்:


ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்த கட்சி பொறுப்பாளர்களையும் Tamil Nadu Prohibition of Harassment of Women Act 1998, Information Technology Act 2000 பாரதிய நீதி சட்டம் 2023 மற்றும் பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2023-ன் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்பதில் மிகவும் முனைப்புடன் இருக்கிறேன்.


இதுபோக இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொருப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்த வித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வேன்.


Online abuse என்பது சட்டத்தின் இரும்பு கரங்களால் ஒடுக்கப்படவேண்டிய ஒன்று. அதைப் பொருத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை, குறிப்பாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அறவே இல்லை. உங்கள் அருகாமையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் online abuse பற்றிய புகார்களை உடனடியாக எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யவும். மேலும் commission for women – உதவி எண் 7827170170. இதர உதவி


எண்கள் 100, 112, 181, 1091, 1098,; 1930 மற்றும https:// cybercrime.gov.in (NCRP Portal) மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.


சமூக வலைத்தளங்கள் இன்று குழந்தைகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் சூழலில், நாம் அதில் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நன்றி


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


சமீப நாட்களாக வருண்குமார் ஐ.பி.எஸ். மீது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததையடுத்து, அவர் இந்த பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.