தமிழ்நாட்டில் கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று பேசிய இந்து மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் உடையாரை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.


கலவரம் செய்தால் தான் பாஜக வளரும்:


தமிழ்நாட்டில் கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரும், நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் உடையார் பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களை தேர்தலில் 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது.


பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்தது.ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி என்கிற போதிலும் அங்கும் பாஜக வெற்றி பெறவில்லை


அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்:


இந்த நிலையில் தமிழ்நாட்டில் கலவரம் செய்தால்தான் பாஜக வளரும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சூழலில் தான் சர்ச்சைக்குறிய விதத்தில் பேசிய உடையாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான திரு உடையார் அவர்கள் கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரையாடலில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


மேலும் பாரதிய ஜனதா கட்சியின் உள் விவகாரங்களில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தலையிடுவது இந்து மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். பாஜக மாவட்ட தலைவரோடு தான் நடத்திய உரையாடலை பதிவு செய்து பொதுவெளியில் வெளியிட்டு ஹிந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.


மேலும் அந்த அறிக்கையில்,” இந்து மக்கள் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். இது அவர் மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும்.
90 நாட்களுக்குள் அவரிடம் விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
கட்சி நிர்வாகிகள் யாரும் அவரோடு இணைந்து செயல்பட்டால் அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார் அர்ஜுன் சம்பத்.


மேலும் படிக்க: Anniyur siva profile: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா - யார் இவர்..? - முழு பின்னணி இதோ