விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். புகழேந்தி மறைவையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின்போதே விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை.


இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ம் தேதி தொடங்குகிறது. இத்தொகுதியில் மீண்டும் தி.மு.க.போட்டியிடுகிறது.


விக்கிரவாண்டி இடைதேர்தலில் அன்னியூர் சிவாவை திமுக வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.1971-ம் ஆண்டு, ஏப்ரல் 3ம் தேதி பிறந்த அன்னியூர் சிவா, பி.ஏ., இளங்கலை பட்டம் படித்துள்ளார். 1987-ம் ஆண்டு திமுகவில் இணைந்து, 1988ல் தபால் நிலையங்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர். 1989ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், 1996 ஆண்டு அன்னியூர் கூட்டுறவு வங்கித் தலைவராகவும், 2002ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினராகவும், 2020ம் ஆண்டு மாநில விவசாய அணி துணை அமைப்பாளராகவும், தற்போது விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பில் உள்ளார்.


அன்னியூர் சிவா, இதுவரை உள்ளாட்சி தேர்தல் உட்பட மக்களால் தேர்வு செய்யப்படும் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், அர்ஷிதா சுடர் என்ற மகளும், திரிலோக் ஹரி என்ற மகனும் உள்ளனர். மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள நிலையில் திமுக தலைமை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அன்னியூர் சிவாவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.