வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் அடிதடி தகராறு, நண்பருடன் குடிக்க சென்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் குத்திக் கொலை, இது தொடர்பாக வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா முத்தியால்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஏரிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ் இவரது மகன் கனக சபாபதி வயது 24. எல்லை பாதுகாப்பு படை ( BSF ) வீரராக இமாச்சல் பிரதேசம் டார்ஜிலிங் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். 40 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதி தனது உறவினர் விட்டு திருமணத்திற்காக நண்பர் ஆனந்தராஜ் என்பவர் உடன் இரு சக்கர வாகனத்தில் தாம்பரத்திற்கு சென்று திரும்பி வந்துள்ளார்.


இருவருடன் அடிதடி தகராறு


திருமணத்திற்கு சென்று விட்டு வந்த வழியில் ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் மது குடிக்க நண்பர்கள் இருவரும் சென்று உள்ளனர். மதுபானம் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில், அங்கிருந்தஆசாமி ஒருவருக்கும், இவர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கனக சபாபதி ஆனந்த ராஜ் ஆகிய இருவருடன் அடிதடி தகராறு ஈடுபட்டு உள்ளனர். அடிதடி தகராறு கனகசபாபதிக்கு கத்தி குத்து விழுந்து உள்ளது.


 


வரும் வழியிலேயே உயிரிழப்பு


பின்னர் அங்கிருந்து நண்பர்கள் இருவரும் புத்தகரம் கூட்டு சாலை வழியாக, இரு சக்கர வாகனத்தில் திரும்பிய நிலையில் கனகசபாபதிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் நிலை தடுமாறி மயங்கி விழுந்து உள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதி ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.


 


வழக்கு பதிவு


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வாலாஜாபாத் போலீஸ்சார் கனகசபாபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் கடையில் அடிதடியில் ஈடுபட்டு கத்தியால் குத்திய ஆசாமிகளை வாலாஜாபாத் போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த டாஸ்மார்க் கடையில் தினதோறும் அடிதடி, கொலை கொள்ளை நடைபெறுவதாகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் இந்த டாஸ்மார்க் கடையை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படை வீரர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது


இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : முதல் கட்டமாக  தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். போதையில் நடந்த தகராறு என்பதால் அப்பகுதியில் இருக்கும் சிலர் மீது சந்தேகம் அடைந்து விசாரணையை துவங்கி இருக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.