மயிலாடுதுறையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அரியலூரில் சிறுத்தை:
கடந்த ஒரு வார காலமாக மயிலாடுதுறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி வந்தது சிறுத்தை. மலைகளே இல்லாத டெல்டா மாவட்டத்தில் எங்கிருந்து வந்தது இந்த சிறுத்தை என்ற கேள்விக்கே இடம் கிடைக்காமல் இருந்த சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுத்தையை பிடிக்க 50 பேர் கொண்ட வனத்துறையினர், 45 கேமராக்கள், 7 கூண்டுகள், சிறப்பு படையினர் மயிலாடுதுறையில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக எந்த கூண்டிலும் சிக்காமல் இருந்த வந்த சிறுத்தை, இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சுற்றுச்சுவரை தாவிக்குதித்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. இதை அந்த மாவட்ட வனத்துறையினர் மற்று் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 3 மணி நேரம் மட்டுமே அரியலூர் மாவட்டம் என்பதால் சிறுத்தை வந்திருக்க சாத்தியம் என்றும், காவிரி கரையோரமாகவே சிறுத்தை வந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறையில் உலா வந்த அதே சிறுத்தைதான் அரியலூரில் வலம் வருகிறதா? என்றும், அரியலூரில் உலா வந்தது வேறு சிறுத்தையா? என்றும் ஒருபுறம் ஆய்வு செய்து வருகின்றனர். அதேசமயம், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, செந்துறை பகுதியில் வனத்துறையினரும், காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே சிறுத்தையா?
சிறுத்தை பிடிபடாமல் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருவது டெல்டா மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைந்து அந்த சிறுத்தையை பிடித்து அடர் வனத்தில் விட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரியலூர் சிறுத்தையின் தெளிவாக புகைப்படங்கள் கிடைத்தாலோ அல்லது அவற்றின் எச்சம், எடிஎன்ஏ ஆய்வு போன்ற சோதனைகளுக்கு பிறகே, இது மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தையா ?அல்லது இது வேறு சிறுத்தையா? என உறுதியாக கூற முடியும் என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.