திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், குழந்தை தொழிலாளர் உதவி ஆணையாளர் ராஜசேகரன் வழிகாட்டுதலின்படி, ஆரணி தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி தலைமையில், தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்டஇயக்குனர் அருள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பரமேஸ்வரன். சைல்டுலைன் திட்ட இயக்குனர் முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆரணியில் உள்ள கடைகளில் குழந்தைகளை வைத்து வேலைவாங்கி வருவதாக ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சோதனையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து, ஆரணி காந்தி சாலை, சத்திய மூர்த்தி சாலை, சூரிய குளம், வாழைப்பந்தல், இரும்பேடு, கல்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாட்டர் கம்பெனி, இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 12 வயது முதல் 16 வயது வரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அதில் ஒரு சிறுவன் மாற்றுத்திறனாளி எனவும் தெரியவந்தது. அந்த சிறுவர்களை மீட்ட அதிகாரிகள், மாற்றுத்திறனாளி சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்து, அவர்களை மீண்டும் பிள்ளைகளை எச்சரித்தனர். பின்னர், மற்ற 9 நபர்களையும் திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு திட்ட ஆண்கள் வரவேற்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 8 கடைகளின் உரிமையாளர்கள் மீது ஆரணி நகர, தாலுகா காவல்நிலையத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் குழந்தை தொழிலாளர்கள் 3 நபர்கள் மீட்கப்பட்டு, சமூக பாதுகாப்பு திட்ட ஆண்கள் வரவேற்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சமூக ஆர்வலர் வினித்திடம் பேசுகையில்;
தமிழ் நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இன்னும் அதிகம் இருப்பதாக, கணக்கெடுப்பு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. விதை நெல் வீணாவதைபோல், பள்ளி செல்லாத குழந்தைகளின் வாழ்க்கை திசைமாறுகிறது. "பெற்றோரின் அறியாமை, பெற்றோரின் பேராசை, மற்றும் குடும்பத்தின் வறுமை, முதலாளியின் மனிதநேயமின்மை மற்றும் பெற்றோரின் தியாக மனப்பான்மை அற்ற செயல் என ஐந்து விஷயங்களால், குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் முறையாக ஆய்வு நடத்தினால் பல குழந்தை தொழிலாளர்களை காப்பாற்ற முடியும். ஆனால் தங்களின் கடைமைகளை செய்வது போன்று ஆய்வு நடத்துகின்றனர் என்று தெரிவித்தார்.
பொதுமக்கள் இத்தகைய குழந்தை தொழிலாளர்கள் முறையை கண்டறிய நேரிட்டால் சைல்டு லைன் தொலைபேசி எண்–1098 தகவல் தெரிவிக்கலாம். மேலும் மத்திய அரசின் இணையதளமான www.pencil.gov.in வாயிலாக புகார் செய்யலாம்.