ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே  போகலூரில் வசித்து வருபவர் நாகநாதன். இவர் 14 ஆண்டுகளாக போகலூர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும் 2011 முதல் 2016 வரை போகலூர் ஒன்றிய சேர்மனாகவும், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் போக்குவரத்து துறை அமைச்சர்  ராஜகண்ணப்பன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 


பரமக்குடி முனியாண்டிபுரம் காலனியில் உள்ள நாகநாதனின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போகலூர் யூனியன் சேர்மனாக நாகநாதன் இருந்த காலத்தில் சாலைகள், கலையரங்கம் அமைத்ததில்  ஊழல்கள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அதிமுகவினரே புகார் அளித்ததால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.



இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் தலைமையில் நாகநாதனின் வீட்டுக்கு வந்த ஆறுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல  மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர். நாகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் கைப்பற்றியதுடன், பல கோடி மதிப்பிலான அசையா  சொத்து வாங்கியதற்கான ஆவணங்கள், 15 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் 88 சவரன்  நகைகளை இதுவரை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். நாகநாதனின் உறவினர்கள், பினாமிகள், ஒப்பந்ததாரர்கள் குறித்த விபரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சேகரித்து வருகின்றனர்.



நம் கட்சியில் இருந்து சம்பாதித்து விட்டு ஆட்சி மாறியவுடன் கட்சி மாறிய இந்த ஆளை சும்மா விட கூடாது என்று கங்கணம் கட்டிய இராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர்தான் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் போட்டுக்கொடுத்துள்ளதாக பேசப்படுகிறது. இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது,


லஞ்ச ஒழிப்புத்துறையிடம் போட்டுக் கொடுத்தது நாங்கதான்; இவ்வளவு நாளாக இங்க இருந்து சம்பாதித்து விட்டு, இப்ப கட்சியை விட்டு ஓடிப்போனான் நாங்க சும்மா விடுவோமா என கூறினார்.


 ‘’சம்பாதிச்ச பணத்தை காப்பாத்திக்க தான் இவரு திமுகவுக்கு தாவினாரு.. ஆனால் கட்சி தாவியும் சொத்தைக் காப்பாற்ற முடியாமல் போச்சே என அப்பகுதி மக்கள் பேசிக்கொள்கின்றனர்.