அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை குனியாமுத்தூரில் உள்ள வேலுமணி வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை கோடம்பாக்கத்தில்  உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக அவருக்கு 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது.


முன்னதாக, அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்காருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.


தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் சேகரின் வீடு, ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


இந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 13 மணி நேரத்திற்கும் மேலாக 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியுள்ளது. மேலும், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம்:


தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி 
விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள
நிறுவனங்கள் பெயரிலும் தனதுபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த 21.07.2021ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண்.5/AC/2021 பிரிவு 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 22.07.2021ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூ.25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள்கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.