தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த பன்னீர்குளம் கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விமானதளம், விமான நிலையமாக மாறுமா? என்ற எதிர்பார்ப்பு தென் மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. விடுதலை அடையும் முன்னர், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் விமானப் படை தளங்களை அமைத்தனர். அதேபோல் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு-கடம்பூர் ஊர்களுக்கு இடயே உள்ள பன்னீர்குளம் பகுதியில் 1936ஆம் ஆண்டு 2,500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட விமான தளம் அமைக்கப்பட்டது.
இந்த விமான தளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள் வந்து இறங்கியதாகவும், இதேபோல் 2 விமானங்கள் வான் மேலே புறப்பட்டுச் சென்றதாகவும் ஊர் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர். இந்த விமானதளத்தின் ஓடுதளம் மட்டும் 60 ஏக்கரில் பரப்பரளவிலும் ஓடுதளத்தின் பாதையானது 5 அடி ஆழத்திற்கு தடிமன் கொண்ட வகையிலும் ஆங்கிலேயர்கள் வடிவமைத்துள்ளனர்.
சுமார் 75 ஆண்டுகளாகியும் இன்றுவரை ஓடுதளம் (ரன்வே) எந்தவித சேதாரமும் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஒரு முறை தமிழகத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்த விமான தளத்தில் தரையிறங்கி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கூட இரண்டு முறை விமான படையைச் சேர்ந்த விமானம் இப்பகுதியில் தரையிறங்கியது. இதனால் இங்கு விமான நிலையம் அமையுமா என்று அப்பகுதி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி ஆட்சியராக இருந்த ஆசிஷ்குமார், கயத்தாறு விமான தளத்தை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கண்டுக்கொள்ளப்படாமலேயே இருந்து வரும் விமான தளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கட்சி வேறுபாடுகள் இன்றி பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் இந்த விமான தளத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள். அமமுக, திமுக உள்ளிட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் விமான படைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறனர்.
ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற இந்த விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தை அப்பகுதி விவசாயிகள் பயிர் வகைகளை பிரித்து எடுப்பதற்கும் தானியங்களை உலர்த்துவதற்கும் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக விமான தளம் பராமரிக்கப்படாததால், விமான தளத்தில் ஆங்காங்கே முட்செடிகள் அடர்ந்து வளர்ந்தும், களை செடிகளும் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி சமுகவிரோதிகள் மது அருந்தும் மதுக்கூடமாகவும் மாறியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
தற்போதைய சூழலில் இலங்கையில் முத்துமாலை திட்டத்தின் கீழ் சீனா தனது காலை வலுவாக ஊன்றி வரும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது உள்ளது. தென் தமிழகத்தில் கூடங்குளம் அணு உலை, மகேந்திரகிரி இஸ்ரோ மையம், தூத்துக்குடி மாவட்டத்தில் கனநீர் ஆலை, ஜிர்கோனியம் காம்ப்ளெக்ஸ், விரைவில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம், துறைமுகம், அனல்மின் நிலையம் என உச்சப்பட்ச பாதுகாப்பு கொண்டவைகள் அமைந்து உள்ளன.
தென்னிந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவசர காலங்களில் கிழக்கு கடற்கரை சாலையிலேயே போர் விமானத்தை தரை இறக்க மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில் கயத்தார் விமானப்படை தளத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் முடியும் என்பதாலும் சிறிது சிறிதாக காணாமல் போகும் விமானப்படை தளத்தை உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும் என கயத்தாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.