திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திருமதி மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர்.   திண்டுக்கல் மாவட்டம் RM காலனி 1வது தெருவில் அவர் வசித்து வருகிறார்.  மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை DSP நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட  குழு சோதனை நடத்திவருகின்றனர்.


திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த ஏப்ரல் மாதம் மகேஸ்வரி  பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றியவர்.


இதற்கிடையே இவர் பணியாற்றிய பொழுது மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் பணிகளுக்கு கூடுதலாக கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் ஆர்.எம் காலனி மூன்றாவது குறுக்குச் சாலையில்  உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜ், ஆய்வாளர் ரூபா கீதா ராணி தலைமையிலான பத்துக்கு மேற்பட்ட போலீசார் இன்று ஏழு முப்பது மணி அளவில் ஆணையர் மகேஸ்வரி வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.


மேலும் அவரது வீட்டில் உள்ள சொத்து ஆவணங்கள், ரொக்க பணம் ஆகியவற்றிற்கு  முறையாக கணக்கு உள்ளதா, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?. என ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.


திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவியேற்று கொண்டு இரண்டு மாதங்கள் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை காரணமாக மாநகராட்சியில் அவருடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலை ஏழு முப்பது மணி அளவில் தொடங்கிய சோதனை தற்போது வரை நடைபெற்று வருகிறது.