EPS AIADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழகத்துடன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு


அதிமுக தலைமைக் கழகம் பெயரில் வெளியாகியுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிமுக - தவெக கூட்டணி:


அண்மையில் நடந்து முடிந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக மாநாடு, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக ஆகிய கட்சிகளை, பிரிவினைவாத கட்சி மற்றும் குடும்ப அரசியல் கட்சி என மறைமுகமாக சாடியிருந்தார். ஆனால், அதிமுகவை அவர் தாக்கி பேசவில்லை. இதனால், விஜய் அதிமுக உடன் நெருக்கம் காட்டுவதாக கருதப்பட்டது. இதனால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணி அமையும் என கணிக்கப்படுகிறது.


இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், அதிமுகவினரோ விஜயின் அரசியல் வருகையை பாராட்ட் வருகின்றனர். இந்நிலையில் தான், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள பவன் கல்யாணை போன்று கூட்டணி ஆட்சியில் இடம்பெற்று, துணை முதல்வர் பதவி பெற்று முதலில் கட்சியை வலுவாக கட்டமைக்கும் பணியில் விஜய் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது.