Annamalai On DMK: மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு எந்த வித தகுதியுமில்லை என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


மகளிர் உரிமை மாநாடு:


திமுக தலைமையிலான மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைந்ததும் மகளிருக்கான இடஒதுக்கீடு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி உடனடியாக அமல்படுத்தப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார். 


அண்ணாமலை பதிலடி:


இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”தி.மு.க  I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை அழைத்து மகளிர் உரிமை மாநாடு நடத்தியுள்ளது. அதில்,  மகளிர் உரிமை மாநாட்டில் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு குறித்து சரத்பவார் மகள், அகிலேஷ் யாதவ் மனைவி உள்ளிட்டோர் குற்றம் சாட்டி உள்ளனர். திமுக எம்.பி கனிமொழி பெண்கள் அரசியல் வருவதை தடுத்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு எந்த வித தகுதியுமில்லை. பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எல்லாருக்கும் தெரியும். சாதாரணமாக பெண்கள் கூட அரசியலில் வரும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த வித தகுதியுமில்லை.


திமுகவை வளர்ப்பதிலேயே காங்கிரஸ் குறிக்கோள் - அண்ணாமலை:


காங்கிரஸ் தங்களது கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில் குறிக்கோளாக உள்ளது. மகளிருக்கு பாதுகாப்பு இல்லாமல், வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்?. சென்னையில் டிசம்பர், 31ம் தேதி நடந்த மகளிர் மாநாட்டில், பெண் போலீசாரிடம் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் தவறாக நடந்து கொண்டார்கள். இது தான் இவர்கள் மகளிரிடம் காட்டும் லட்சணம்.


”ஸ்டாலின் பயம் கொள்கிறார்”


ஒற்றை ஆட்சி குறித்து கானல் நீர்போல் ஒரு கனவு கண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயந்து கொள்கிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு எதும் செய்யவில்லை என குற்றச்சாட்டுகிறார். ஆனால்,  9 ஆண்டுகளில் 10 லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்ததற்கு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறோம். தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது; சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.


உதயநிதிக்கு பதிலடி:


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இந்திய ரசிகர்கள் ”ஜெய் ஸ்ரீராம்” என முழக்கங்களை எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு, விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்ததால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார்.


”5 மாநில தேர்தல்”


கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள்தான் மேற்கொள்வார்கள். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது மட்டுமே என் குறிக்கோள்; 5 மாநில தேர்தல்களில் இந்தியா கூட்டணி முழுவதும் சேர்ந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


இஸ்லாமியர்கள் விடுதலை விவகாரம்:


ஒரு தீவிரவாதத்தை தீவிரவாதமாக பா.ஜ. பார்க்கிறது. மதமாக பார்க்க வில்லை. மக்களின் உயிரை எடுக்க துணிந்த தீவிரவாதிகளுக்கு மன்னிப்பே கிடையாது. நாளை(அக்.,16) முதல் அவிநாசியில் ”என் மண் என் மக்கள் யாத்திரை” துவங்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.