தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அண்ணாமலை தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சரிந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளையாகத்தான் உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது. தமிழகத்தில் சாதாரண மனிதனின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாக பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்புகிறது. கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே இல்லை என்ற அளவுக்கு, தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகக் காவல்துறையினரை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின். ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை உணர்ந்து, உடனடியாக சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.