விழுப்புரம்: நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் பாதுகாவலரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.


குடோன் பாதுகாவலர் கொலை


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 64). இவர் குண்டலப்புலியூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 9.2.2021 அன்று இரவு தேவசகாயம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அசோகபுரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அருள்மொழி (29) என்பவர், தேவசகாயத்திடம் வீண் தகராறு செய்து அவரை தகாத வார்த்தையால் திட்டியதோடு உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.


மேலும் வி.சாத்தனூரைச் சேர்ந்த சாமிக்கண்ணு அவரது வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற அருள்மொழி, அவரிடமும் வீண் தகராறு செய்து தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த தேவசகாயம், சாமிக்கண்ணு ஆகிய இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவசகாயம் இறந்தார்.இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் அருள்மொழி மீது கெடார் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.


அருள்மொழிக்கு ஆயுள் தண்டனை


இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட அருள்மொழிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அருள்மொழி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் சுப்பிரமணியன், நடராஜன் ஆகியோர் ஆஜராகினர்.