Annamalai: அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர் - அண்ணாமலை

எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம்.

Continues below advertisement

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எல்.முருகன் மறுபடியும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றது. இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டது. அதில் 50 முறை இந்திரா காந்தி ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் நேரம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?

Continues below advertisement

இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024 ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த முடியும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பத்து வரி எழுதி வந்து முதல்வர் சட்டமன்றத்தில் ஆதரவு, எதிர்ப்பு கேட்பது என்பது யோசனை இல்லாமல் கொண்டு வந்துள்ளார். எல்.முருகனை நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் வேட்பாளர் தயாராக உள்ளார். எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.


குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை கொண்டு வர 40 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். ராகுல்காந்தி விவசாயிகள் தற்கொலை செய்த போது எங்கே போனார்? விவசாயிகள் சும்மா சும்மா வந்தால் என்ன அர்த்தம்? கரும்பு விலை உயர்வு, ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தருவதாக திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை எதிர்த்து ஏன் விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை? சில விவசாயிகள் குழுவிற்கு தேர்தல் வந்தால் மட்டும் கண் திறக்கும். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் கள்ளு கடையை திறக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக இயற்ற இயலாது.

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை. கொத்தடிமைகள் கூட்டம் அதிகமாக உள்ளது. கொத்தடிமைகள் ஜால்ரா போடுபவர்களாக மாற்றியுள்ளார்கள். எம்.ஜி.ஆர். அரசியலில் இருக்கும் போது திமுகவினர் கேவலமாக பேசினார்கள். உதயநிதி குடும்ப கோட்டாவில் வந்தவர்கள். உதயநிதியை எம்.ஜி.ஆர். உடன் 1 சதவீதம் கூட ஒப்பிட முடியாது” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, ”எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”சபாநாயகர் திமுககாரரை விட மோசமாக உள்ளார். சபாநாயகர் நடுநிலையாக இருந்தால் பிரச்சனை இருக்காது. நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து கட்சியை வளர்க்கும் வேலையை பாஜக செய்யாது. எங்கள் கட்சியில் இணைந்தவர்களை வயதானவர்கள் என்ற வேலுமணி, எடப்பாடி பழனிசாமி வயது என்ன? வயதை பற்றி பேசி வேலுமணி அவரது கட்சி தலைவர் கேவலப்படுகிறார். எடப்பாடி பழனிசாமி இளைஞரா? எடப்பாடி பழனிசாமி வயதை விட எங்கள் கட்சியில் இணைந்தவர்களின் வயது 90 சதவீதம் குறைவு தான். வேலுமணி கண்ணாடி கூண்டில் இருந்து கல் ஏறிய கூடாது.இப்படி தவறாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது

கேரள அரசு சிறுவாணி அணையில் தரும் தண்ணீரின் அளவை குறைக்க கூடாது. கோவை சீட் கம்யூனிஸ்ட்களுக்கு கிடைக்குமா என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் மக்கள் பிரச்சனைகளை பேசி 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அது நல்லகண்ணு கால கம்யூனிஸ்ட்கள். தற்போது அவர்கள் கமர்சியலாகி விட்டார்கள். திமுக காங்கிரஸ் போல காதல் திருமணம் இருக்க கூடாது. மோடி பாஜக போல காதல் திருமணம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola