பாரதிய ஜனதாக கட்சியின் எம்.பி-யான நிஷிகாந்த் துபே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், பாஜகவிற்கு மோடி நிச்சயம் தேவை என்றும், அவர் இல்லாமல், 2029 தேர்தலில் பாஜக-வால் 150 இடங்களைக் கூட வெல்ல முடியாது என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜக-விற்கு தான் மோடி தேவை“

பாஜக-வின் நிஷிகாந்த் துபே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள மோடி குறித்த அவரது கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அந்த பேட்டியில் அவர், அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு மோடியை கட்சியின் தலைவராக பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடி பாஜகவின் முகமாக இல்லாவிட்டால், 2029 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 150 இடங்களைக் கூட வெல்லாது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Continues below advertisement

அதோடு, இன்றைய சூழலில், பாஜக-விற்குத் தான் மோடி தேவையே தவிர, மோடிக்கு பாஜக தேவை இல்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். 2029 மக்களவைத் தேர்தலுக்கு, பாஜகவின் முகமாக மோடியை நிறுத்துவதைத் தவிர, அக்கட்சிக்கு வேறு வழியே கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சமீபத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயது நிரம்பியவர்கள், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என பாஜக குறித்து கூறியிருந்தார். அது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நிஷிகாந்த துபே, அந்த விதி மோடிக்கு பொருந்தாது என்றும், கட்சிக்கு அவர் தேவையே தவிர, அவருக்கு பாஜக தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், ஒரு கட்சி, ஆளுமைகளின் அடிப்படையிலேயே செயல்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மோடியை விலகச் சொல்லும் கட்சியின் விதிகள்

பாரதிய ஜனதா கட்சியின் விதிகளின்படி, 75 வயதிற்கு மேற்பட்டோர் அக்கட்சியின் தலைவராக ஆகவும் முடியாது, இருக்கவும் முடியாது. பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கு 75 வயது நிரம்பிவிட்டால், அவர்கள் தலைமைப் பொறுப்பை துறந்து, அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதே அக்கட்சியின் விதி.

வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் இதற்கு உதாரணமாக இருக்கின்றனர். இந்நிலையில், 75 வயதை பூர்த்தி செய்ய இருக்கும் பிரதமர் மோடி, கட்சியின் விதிகளின்படி விலகி, அடுத்த தலைவர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அதையே, ஆர்எஸ்எஸ் தலைவரும் கூறியிருந்தார்.

ஆனால், தற்போது பாஜகவின் முக்கிய முகமாக மோடி இருப்பதாலும், அவரது ஆளுமையை வைத்தே கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது என்பதாலும், அவர் இல்லாமல் பாஜக தேர்தலை சந்திப்பது சாத்தியமா என்ற கேள்வி ஏற்கனவே எழுந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளி நாடுகள் வரை மோடியின் புகழ் பரவி உள்ளது.

இப்படி ஒரு சூழலில், இவற்றை கருத்தில் கொண்டு, பாஜக தனது விதிகளை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுவார்கள். அதில், கட்சியின் விதிகளை மாற்றுவது ஒரு பெரிய விஷயமா என்ற கேள்வி எழலாம். ஆனால், பாஜக அதை செய்யுமா என்பதே தற்போதைய கேள்வி.

வெற்றி முக்கியமா.? கட்சி விதி முக்கியமா.? என்ன முடிவை எடுக்கப் போகிறது பாஜக.? பொறுத்திருந்து பார்ப்போம்.