அண்ணாமாலை செய்தியாளர் சந்திப்பு:


பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான, கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக குறிப்பிட்ட இரண்டு கட்சிகளின் பிரமுகர்கள் இடையே, சமூக வலைதலங்களில் ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.


பிரித்து குளிர்காய விரும்பவில்லை:


அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ”பிரிந்து இருங்கள், ஒன்று சேர்ந்து செயல்படுங்கள் என அதிமுக தலைவர்களிடம் பாஜக எப்போது கூறியதில்லை. அ.தி.மு.க. மற்றும் தமிழக மக்களின் நலன் கருதியே எங்களின் எண்ணத்தை, ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இடையே தெரிவித்து உள்ளோம். ஆனால், மூடிய அறையில் தலைவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற உரையாடல் குறித்து தெரியாமல், சில இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தலைவர்களுக்குள் நடந்த கருத்து பரிமாற்றங்களை அரசியல் நாகரீகம் கருதி, நாங்கள் வெளியிடுவதில்லை. அவ்வாறு, இருக்கையில், கட்சிகளை சேர்ந்த சிலர் தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனை நினைக்கும்போது பயமாக உள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவது தொடர்பாக கருத்து தெரிவித்த  பாஜக தலைவர்களை நான் கண்டித்தேன். சண்டை மற்றும் பிரச்னையை ஏற்படுத்தி பிரித்து அதன் மூலம் குளிர் காய்வது எங்களின் நோக்கமல்ல” என்றார்.


பொன்னையன் குற்றச்சாட்டுகளுக்கு பதில்:


வடமாநிலங்களில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு செய்தது என்ன என்பது எங்களுக்கு தெரியும் என, அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியது குறித்தும் கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அண்ணமாலை, ”சில மாதங்களுக்கு முன்பாக பொன்னையன் குரலில் ஆடியோ ஒன்று வெளியானது. ஆனால், அதுகுறித்து கேட்டபோது அந்த பதிவில் இருப்பது எனது குரலே இல்லை என கூறிவிட்டார். செய்தியாளரகள் ஏதேனும் கேள்வி எழுப்பி இருப்பார்கள் அதற்கு அவரும் பதிலளித்து இருப்பார். எனவே பொன்னையனின் கருத்தை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. கூட்டணி கட்சிகளிடம் பாஜக நேர்மையாக தான் உள்ளது. பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்கு தெரியும்” என கூறினார்.


”அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்”


முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பை சேர்ந்து பணியாற்ற வலியுறுத்தினோம். திமுகவை வீழ்த்தவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் ஒருங்கிணைந்த அதிமுக அவசியம், எனவே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-ஐ ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்” என கூறினார்.


ஈபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு:


இதுதொடர்பாக பேசிய ஈபிஎஸ் ஆதரவாளரும்,  அதிமுக ஐடி விங் மண்டல செயலாளருமான சிங்கை ஜி ராமச்சந்திரன், ”எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என சொல்ல பாஜக யார்?  திமுகவிற்கு எதிராக தனித்து போட்டியிட்டு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத நீங்கள், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த எங்களுக்கு அறிவுரை கூறலாம் என எப்படி நினைக்கிறீர்கள்? தயவுசெய்து உங்கள் வரம்புகளை அறிந்து கொள்ளுங்கள்” என காட்டமாக டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.


பாஜக பதிலடி:


இதுதொடர்பாக பதில் அளித்த பாஜகவின் ஐடி விங் மாநில தலைவர்  நிர்மல் குமார், “எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்?  என கேள்வி எழுப்பினர். இதேபோன்று, பாஜக பிரமுகர்கள் பலரும் சிங்கை ஜி ராமச்சந்திரனுக்கு சமூக வலைதளங்களில் காட்டமாக பதிலளித்தனர். இதனால், இருகட்சி தொண்டர்களும் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள், விஷயம் தெரியாமல் பேசுவதாக அண்ணாமாலை விளக்கமளித்துள்ளார்