தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை ஈச்சனாரி பகுதியில் இருந்து பழநி மலை வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார். ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து துவங்கிய பாத யாத்திரையை,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “ராகுல் காந்தி வெற்றிகரமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான தூரத்தை கடந்து இருக்கிறார். இந்த நடைபயணத்தினால் மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை யாரும் பார்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரது பயணத்தை கொச்சைப்படுத்துவது தவறு.


திமுகவில் ஒரு அமைச்சர் தொண்டரை நோக்கி கல் எடுத்து எரிகிறார். இன்னொரு அமைச்சர் தொண்டரை‌ மேடையில் அடிக்கிறார். டி.ஆர்.பாலு சேது சமுத்திர திட்டம் தொடர்பாக பேசிய வீடியோவை கட் செய்து எடிட் பண்ணி வெளியிட்டதாக டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். கட் பண்ணி எடிட் பண்ணாத வீடியோ உள்ளது. அதில் இந்து கோவில்களை இடித்ததை பெருமையாக பேசி தம்பட்டம் அடித்ததை தமிழக மக்கள் பார்த்தார்கள். 


அமைச்சர் கே.என்.நேரு, ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய ஆடியோவை எடிட் செய்ததாக அமைச்சர் எ‌.வ.வேலு கூறியுள்ளார். எ.வ. வேலுவிற்கு சவால் விடுகிறேன். அவர் அதனை எங்கே சமர்ப்பிக்க சொன்னாலும் சமர்பிக்க தயார். அதனை தடயவியல் ஆய்வுக்கு முதலமைச்சர் உட்படுத்தி கொள்ளலாம். அதில் அமைச்சர்கள் பணம் கொடுப்பது தொடர்பாக பேசுகிறார். கே.என்.நேரு நீலகிரியை சேர்ந்த வனத்துறை அமைச்சரை கேவலமாக பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை மாநில தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க உள்ளோம். இதனை எடிட் செய்ததாக நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். எடிட் செய்ததாக திமுகவினர் எத்தனை நாட்களுக்கு பொய் சொல்வார்கள்?




புதுக்கோட்டை துவங்கி சேலம் உள்ளிட்ட பல இடங்களில் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல பிரச்சனை உள்ளது. சமூக நீதி பற்றி திமுகவினர் என்ன அருகதை உள்ளது? சேலத்தை பட்டியலின மக்களை இழிவாக பேசிய திமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஏன் பயன்படுத்தவில்லை? பூஜை செய்யவா அச்சட்டத்தை வைத்திருக்கிறார்கள்? வேங்கவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை ஒரு மாதத்திற்கு மேலாகியும் கைது செய்யவில்லை. திமுக ஒரு தீய சக்தி என்பதை கட்டிக் கொண்டிருக்கிறது


ஈரோடு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரிரு நாட்களில் தெளிவுபடுத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியில் வேட்பாளர் வலிமை பொருந்திய வேட்பாளராக இருந்து எதிர்க்க வேண்டும். திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இத்தேர்தலில் பாஜக பலப்பரீட்சை வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இது பாஜகவினருக்கான தேர்தல் இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலே எங்களுக்கான தேர்தல்.


பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை யார் போட்டாலும் பிரச்சனை இல்லை. அது பொய் என இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். வேலை இல்லாத 4 பேர் பிரதமர் மோடி பெயரை கெடுக்க வேண்டுமென அப்படத்தை திரையிடுகிறார்கள். இதனால் மக்களிடம் மோடி மீதான மதிப்பு பன்மடங்கு அதிகமாகும். இந்த படம் திரையிடுவதை பாஜகவினர் எங்கும் தடுக்க போவதில்லை. இப்படம் பிரதமர் மோடி மூலம் இந்திய திருநாட்டை கலங்கப்படுத்தும் முயற்சி. இதனை பார்க்க ஆள் இருக்க மாட்டார்கள். நாட்டின் அமைதியை பங்கப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படும் இப்படத்தை திரையிடுபவர்கள் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். 


உத்திர பிரதேச மாநிலம் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்து வருவதால், அடுத்த 10 ஆண்டுகளில் உத்திரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரமாட்டார்கள். வட மாநிலங்களில் இருந்து வருபவர்களை வைத்து அரசியல் செய்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கர்நாடகாவில் தமிழர்களை வெளியேற்ற கூறினால், முதல் ஆளாக பாஜக போராட்டம் செய்யும். ஆளுநர் தமிழக அரசுடன் சுமூகமகா உறவை பேணி வருகிறார். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை பார்த்து அரசியல் செய்ய முடியாது. பாஜக தொண்டர்கள் ஆபாசமாக யாரையும் பேசாதீர்கள். இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒரு செண்ட் நிலத்தை மீட்டுள்ளார்களா? அறநிலையத் துறை எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த வேலையை செய்யவில்லை. குலதெய்வ கோவில்களை அறநிலையத் துறை எடுத்து கொள்கிறது. இந்து சமய அறநிலையத் துறை வேண்டுமா என மக்கள் முடிவு செய்யட்டும். நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என அமைச்சருக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.