சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் அனைவர் மனதிலும் பதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது எனக்கூறி அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “சென்னை 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் கண்டு களித்த சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், இனப் பெருமைகள், துயரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனைவர் மனதிலும் பதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது.
44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் இன்று காலை தொடங்கும் நிலையில், போட்டிகளுக்கான தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். சதுரங்கப் போட்டிகளின் தொடக்கவிழாவைப் போல் இல்லாமல் உலகத் தமிழ் மாநாட்டுக்கு இணையாக தமிழர் நாகரிகத்தின் பெருமையையும், பண்பாட்டையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக நண்பர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்த நிகழ்த்துக் கலை, விழாவில் பங்கேற்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தது. உலகம் முழுவதும் அந்த நிகழ்ச்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்து தமிழர் நாகரிகத்தின் சிறப்புகளை உள்வாங்கிக் கொண்டது.
‘‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி’’ என்ற புறப்பொருள் வெண்பா மாலையுடன் தொடங்கிய அந்த நிகழ்ச்சி, முற்சங்க காலத்தில் தொடங்கி, சங்க காலம், சேர, சோழ, பாண்டியர்கள் காலத்தைய தமிழர் பண்பாடு, திருக்குறள், சிலப்பதிகாரம் சொல்லும் தமிழர்களின் பெருமை, கல்லணையின் மூலம் கரிகால் சோழன் காலத்தில் சிறந்து விளங்கிய நீர் மேலாண்மை, இராஜராஜ சோழன் காலத்தில் தழைத்தோங்கியிருந்த கட்டிடக்கலைக்கு கட்டியம் கூறும் தஞ்சாவூர் பெரிய கோயில், உலகை வெல்லும் போர்த்திறனில் தந்தையை விஞ்சிய இராஜேந்திர சோழன், ஜல்லிக்கட்டு நிரூபிக்கும் தமிழர்களின் வீரம், திருவள்ளுவரின் தொடங்கி பாரதியார், பாரதிதாசன் வரையிலான தமிழர்களின் இலக்கிய வளம், சுனாமியால் ஏற்பட்ட பேரழிவுகள், அதிலிருந்து மீண்டு வந்த தமிழர்களின் வலிமை ஆகியவற்றை கண்முன் காட்சிகளாக விரித்த போது பார்த்தவர்களின் மனதில், ‘நான் தமிழனடா’ என்ற பெருமிதம் ஏற்பட்டது. அதை நானும் உணர்ந்தேன்.
நிகழ்ச்சியின் நிறைவாக சொல்லப்பட்ட ‘‘யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதே தமிழகத்தின் பண்பாடு’’ என்ற செய்தி ஒட்டுமொத்த உலகிற்கும் தமிழ்நாடு சொல்லும் பாடமாகும். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் கமலஹாசன் வழங்கிய வர்ணனை மிகவும் சிறப்பு. அதில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞரின் உழைப்பும் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த நிகழ்ச்சி உட்பட ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனின் கருத்தாக்கமும், காட்சிகள் அமைப்பும் பாராட்டுக்குரியவை ஆகும். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் பாராட்டியதே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
தொடக்கவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. விழா அரங்கில் இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்த நான், தமிழன் என்ற முறையில் பெருமை அடைந்தேன். இந்த விழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை என்று தொடக்க விழாவில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்களின் பலர் எனது நெருங்கிய நண்பர்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
44&ஆவது சதுரங்க ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பங்களித்த கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.