பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்டவாரியாகப் பள்ளிகளில் நேரடி ‘விசிட்’ செய்து அதிரடி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தருமபுரி மாவட்டம் அரசுப்பள்ளி ஒன்றுக்கு விசிட் செய்த அமைச்சர் அங்கே ஆசிரியர் ஒருவர் பாடம் எடுக்கும் முறையால் அசந்துபோய், அவருக்காக ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தருமபுரி மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பார்க்கும் திறன் இழந்தவர். அவர் தனது பள்ளி பாடத்தில் வைரமுத்துவின் கவிதை வரிகளை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து அமைச்சர் வியந்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம் பெறும் வைரமுத்துவின் ‘ஓ என் சமகாலத் தோழர்களே’ கவிதை வரிதான் அது.
இதனைக் கேட்டு வியந்த அமைச்சர் உடனடியாக வைரமுத்துவுக்கு செல்ஃபோனில் அழைத்தார். ஆசிரியர் கவிதை கற்பித்ததைக் கண்டு வியந்ததாகவும் அதை வைரமுத்துவிடம் பகிரத்தான் அழைத்ததாகவும் கூறிய அமைச்சர் அடுத்து ஃபோனை ஆசிரியரிடம் கொடுத்தார். ஆசிரியரிடம் பேசிய வைரமுத்து,”சமகாலத் தோழரே! உங்கள் தொண்டு உயர்ந்தது. இரண்டு கண்கள் இல்லையென்றாலும் இருபது விரல்களும் இருபது கண்கள் என்பதே நம்பிக்கை. நான் தருமபுரி வரும்போது நிச்சயம் உங்களை வந்து சந்திக்கிறேன். வாழ்த்துகள்” எனக் கூறினார்.
தான் வைரமுத்துவின் தீவிர வாசகர் என்றும் சிறு வயதிலிருந்தே கள்ளிக்காட்டு இதிகாசம் கேட்டுள்ளதாகவும் கூறிய ஆசிரியர் வைரமுத்துவிடம் பேசியது மகிழ்ச்சி எனப் பகிர்ந்தார்.
ஓ, என் சமகால தோழர்களே :
ஆசிரியர் - கவிஞர் வைரமுத்து
ஊர் - தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர்
வைரமுத்து பெற்ற விருதுகள் :
- இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருது பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்திற்காக 2003ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும், மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
- ஓ, என் சமகால தோழர்களே என்ற இப்பாட பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
ஓ, என் சமகால தோழர்களே கவிதை விளக்கம் :
அறவியலும், அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ் சமூகம். எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதை தற்கால படைப்பாளர்கள் வலியுறுத்திகின்றனர். அவ்வகையில், அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும்.
உங்களுக்காக அந்த கவிதையின் வரிகள்:
”ஏவும் திசையில் அம்பைப் போல
இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்” என்று பாடியுள்ளார்.