கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் அப்பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தென்மேற்கு பருவமழை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கு பருவ மழை ஜூன் 1ல் துவங்கி தற்போது வரை தென்மேற்கு பருவமழை நன்றாக பொழிந்து வருகிறது. தமிழகத்தில் 190% மழைப் பொழிவு உள்ளது. இம்முறை 90% அதிக மழை பொழிந்துள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரியில் போதுமான மழை இல்லை.
நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி 150% மழை பெய்துள்ளது. 50% மழை அதிகமாக பொழிந்துள்ளது. மேட்டூரில் இருந்து 20 நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டு விட்டது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகியவை முக்கிய மாவட்டங்கள். திருவாரூரில் 110% அதிக மழை பெய்துள்ளது. 200 மிமீ க்கு 422 மிமீ மழை பெய்துள்ளது. விவசாயத்திற்காக உடனடியாக வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். தென் மாவட்டங்களை பொருத்தவரை புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வடிகால் புதுவசதியை உடனடியாக செய்ய வேண்டும். மதுரையில் பெரியார், வைகையில் குருவை நெல் நடவு செய்தவர்கள் அந்த நெற்பயிர்களை பாதுகாக்க வடிகால் வசது செய்து வைத்து கொள்ள வேண்டும். இங்கு 80% வரை அதிக மழை பெய்து உள்ளது. இம்முறை 444 மிமீ வரை மழை பெய்துள்ளது.
வடகிழக்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பொழிவு உள்ளது. 419 மிமீ மழை பொழிவு இருந்துள்ளது. காய்கறி பயிர்கள் இருக்கும் இடத்தில் தண்னீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கோவை உட்பட மேற்கு மாவட்டங்களில் ஓரளவு மழை தான் பெய்துள்ளது. இதனால் பிரச்சனைகள் இல்லை. நீலகிரியில் அதிக மழை பெய்துள்ளது. 1700 மிமீ மழை பெய்துள்ளது. அங்கு மண் அரிப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்த மழையினால் நிலத்தடி நீர் ஓரளவு மேலே வந்துள்ளது. தமிழகத்தில் நல்ல மழை காலமாக அமைந்துள்ளது. நீர்பாசனம் அதிகம் உள்ள இடங்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும். தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களை பொறுத்தவரை, அதிகமழை இருந்தாலும் மழை இல்லாவிட்டாலும் பிரச்சினை வரும். தக்காளி போன்ற செடிகள் மழை அதிகமாக வரும் போது, செடியின் பாரம் தாளாமல் மண் மீது விழுந்து தக்காளி அழுகிவிடும். இதனால் மழைக்காலங்களில் தக்காளியின் விலை அதிகரிக்கும். புரோட்டெக்டட் கல்டிவேசன் முறையில் தக்காளியை வளர்த்தால், தக்காளி கீழே விழாமலும் அழுகாமலும் இருக்கும்.
நிலத்தடி நீர்மட்ட கணக்கெடுப்பை பொறுத்தவரை துல்லியமாக கணக்கெடுக்கும் அளவிற்கு நீரின் மட்டம் உயரவில்லை. ஆனால் நிலத்தடி நீர் உயர்ந்து தான் உள்ளதாகவும் தெரிவித்தார். தங்களிடமும் மழைப்பொழிவை துல்லியமாக கணக்கிடுவதற்கு தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. 285 தானியங்கி வானிலை மையங்கள் உள்ள நிலையில் 240 மையங்கள் இயங்கி வருகிறது. மீதமுள்ளவை கூடிய விரைவில் இயங்கும். தற்போது 80% சரியாக கணித்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் திசை மாறுபாடு காரணமாகவே இம்முறை குறைந்த அளவு மழைப்பொழிவு இருந்தது. 23 நாட்களுக்குள் அது சராசரி நிலையை எட்டிவிடும்.
வேளாண் பல்கலைக்கழகத்தில் 13 பட்டப் படிப்புகளுக்கு 10ம் தேதி அன்று ரேங்க் லிஸ்ட் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ போன்ற பட்டய படிப்புகளை பொறுத்தவரை தமிழக அரசு 3 இடங்களில் தோட்டகலை டிப்ளமோ படிப்பை தந்து வருகிறோம். உறுப்பு கல்லூரிகளை பொறுத்தவரை 8 இடங்களில் தந்து வருகிறோம். இணைய தள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். பட்டயபடிப்புகளில் மொத்தம் அக்ரி கல்சரில் 760 இடங்கள், ஹார்ட்டி கல்சரில் 400 இடங்கள், என்ஜினியரிங் இல் 40 இடங்கள், தமிழ் வழியில் 80 இடங்கள் நிரப்ப உள்ளோம். 35 நாட்கள் வரை அப்ளே செய்யலாம். இலங்கை பொருளாதார சரிவை சரிசெய்ய ஆலோசனைகள் மட்டும் வழங்கி உள்ளோம். குழுக்கள் எதுவும் செல்லவில்லை” எனத் தெரிவித்தார்.