தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திமுக அதிக இடங்களை வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் மக்கள் தேர்ந்தெடுத்துள்ள உறுப்பினர்களின் சொத்து மதிப்பு என்ன, கல்வித்தகுதி என்ன, அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் என்ன என்பதை இங்கு காணலாம்.


இந்த தேர்தலில் திமுக 133 இடங்களிலும் அதிமுக 66 இடங்களிலும் காங்கிரஸ் 16 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும் பாஜக, விசிக தலா 4 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.


குற்ற வழக்குகள் விபரம் :


தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 134 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வென்றவர்களில்  75 பேருக்கு எதிராக மட்டுமே குற்ற வழக்குகள் இருந்தன. மேலும் 57 பேருக்கு எதிராக கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற கடும் குற்றங்களில் ஈடுபட்டதற்காகன வழக்குகள் நிலுவையில் உள்ளன.


குறிப்பாக 2 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கொலை வழக்கும் 13 பேருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கும் 3 பேருக்கு எதிராக பெண்கள் தொடர்பான வன்முறை வழக்கும் ( அதில் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை) நிலுவையில் உள்ளன.




கட்சி ரீதியிலான குற்ற வழக்குகள் :


திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் 96 பேருக்கு எதிராக குற்ற வழக்கும் அவர்களில் 39 பேருக்கு எதிராக கடுங் குற்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் 6 பேர் மீது கடுங் குற்ற வழக்குகள் உள்ளன. 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 5 பேருக்கு எதிராக கடுங்குற்ற வழக்கு உள்ளது. பாமக எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் மீதும் விசிக எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மீதும் பாஜக எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.


சொத்துமதிப்பில் கோடீஸ்வரர்கள் :


தமிழக எம்.எல்.ஏ.க்களில் 192 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது. 2016ல் 170 பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவை சேர்ந்த 89 சதவீதம் பேரும் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 88 சதவீதம் பேரும் பாஜகவை சேர்ந்த 75 சதவீதம் பேரும் கோடீஸ்வரர்கள். அதே போல் பாமகவை சேர்ந்த 55% பேரும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50 சதவீதம் பேரும் கோடீஸ்வரர்கள். இதில் 103 பேருக்கு ரூ.5 கோடிக்கு அதிகமான சொத்துள்ளது. 55 பேருக்கு 2-5 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ளது. 53 எம்.எல்.ஏ.க்கள் ரூ.2 கோடி வரை சொத்து வைத்துள்ளனர்.




டாப் 3 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள் :


அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுகவை சேர்ந்த சுப்பையா தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் அதிக சொத்து வைத்துள்ள எம்.எல்.ஏ. ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.246 கோடி ஆகும்.


சென்னை அண்ணா நகரில் போட்டியிட்ட ஜெயித்துள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.211 கோடி ஆகும்.


திருச்சி மணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ.வான கதிரவன் இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.121 கோடி ஆகும்.


டாப் 3 குறைந்த சொத்து மதிப்பு எம்.எல்.ஏ.க்கள் :


தமிழகத்தில் ஏழையான எம்.எல்.ஏ மாரிமுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அவரது மொத்த சொத்து மதிப்பு வெறும் ரூ.3 லட்சம், அதில் அவரது வீடும் அடங்கும்.


இரண்டாவது ஏழை எம்.எல்.ஏ. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ஆவார். கந்தவர்வகோட்டை எம்.எல்.ஏ.வான சின்னதுரையின் சொத்து மதிப்பு ரூ.4 லட்சம் மட்டுமே.


மூன்றாவது இடத்தில் இருப்பவர் திமுக மணப்பாறை எம்.எல்.ஏ அப்துல் சமத். அவரது சொத்து மதிப்பு வெறும் ரூ.10 லட்சம் மட்டுமே.