பெருவெள்ளம், பேரிடர், பெரும் நிகழ்வு என தமிழ்நாட்டில் என்ன நிகழ்ந்தாலும் அங்கு பொறுப்பு அதிகாரியாக இதுவரை நியமிக்கப்பட்டவர் அமுதா ஐ.ஏ.எஸ். மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மட்டத்திலும் மதிக்கத்தக்க நபராக விளக்கும் அமுதாவை, மீண்டும் தமிழ்நாடு அரசு பணிக்கு அனுப்பியிருக்கிறது மத்திய அரசு.
மாநில அரசு கேட்டுக்கொண்டதனாலேயே அவர் மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை எந்த துறையில் அமர்த்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது, அரசியல் சூழல் சரியில்லாத நிலையிலும் அவரது இறுதிசடங்கை அரசு மரியாதையுடன் கவனமாக நடத்தி, பலரது பாராட்டையும் பெற்ற அமுதா ஐ.ஏ.எஸ்-சை உள்துறை செயலாளராக நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அவரை தனது கனவுத் திட்டமான சென்னை 2.0 திட்ட இயக்குநராக நியமிக்க ஸ்டாலின் விருப்படுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்ட்டி ஓய்வு பெற்ற நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் புதிய உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரை அப்போதைய அதிமுக அரசு நியமித்தது, கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக அதே பதவியில் இருந்து வரும் பிரபாகரின் செயல்பாடுகள் மீது பெரிய விருப்பமில்லாத தற்போதைய திமுக அரசு, அவரை மாற்ற முடிவு செய்திருக்கிறது. பெரும்பாலும் இந்த இடத்திற்கு அமுதா நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும், அவருக்கு முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருக்கும் ஷில்பா பிரபாகர் போன்று, மக்களுடன் நேரடி தொடர்பு உள்ள முக்கியமான பொறுப்பு அமுதாவிற்கு கொடுக்கப்படவுள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தேர்தல் அறிக்கையிலும், திருச்சியில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுகவின் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தும் வகையிலுமான புதிய பொறுப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் என்றும் தலைமைச்செயலக உயர் மட்ட அதிகாரிகள் கூறிவருகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும், அமுதா ஐ.ஏ.எஸ்க்கு முதல்வரின் தனிச்செயலர்களுக்கான சகல அதிகாரங்களுடன் முக்கியமான பதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதி..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்