பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார்.


பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா:


ஆளுநர் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சை ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அவர் முன் வைத்து வரும் அரசியல் கருத்துகள், ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது என்னும் குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அந்த வரிசையில் புதியதாக இணைந்து தான் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.


கறுப்பு உடைக்கே தடையா?


பல்வேறு சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்த பெரியாரின் அடையாளங்களில் ஒன்று கறுப்பு உடை. இந்நிலையில் சேலத்தில் அவரது பெயரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில், மாணவர்கள் கறுப்பு உடையணிந்து பங்கேற்க தடை என சுற்றறிக்கை வெளியானது. இது மாணவர்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததை தொடர்ந்து, கறுப்பு நிற உடைகளுக்கு தடை விதித்து வெளியிட்ட சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப் பெற்றது.


விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி:


விழாவில் ஆளுநர் ரவி, இணைவேந்தரும் அமைச்சருமான பொன்முடி மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரான ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால், கடைசி நேரத்தில் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தமிழக அரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து வரும் ஆளுநருடன், ஒரே மேடையில் விழாவில் வீற்றிருப்பதை தவிர்க்கவே அமைச்சர் விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.


பலத்த பாதுகாப்பு:


விழாவில் கலந்துகொள்ள வந்த ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் பலர் கறுப்பு கொடி காட்ட திட்டமிட்டு சாலைகளின் இருபுறமும் குவிந்தனர்.  இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழா தொடங்கிய பிறகும் கூட, ஆளுநர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து முழக்கங்களை எழுப்பினர்.


வெளியேறிய எம்.எல்.ஏக்கள்:


இதனிடையே, பல்கலைக்கழகம் சார்பில் இருந்து கடைசி நேரத்தில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, பாமகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஆன அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். அப்போது, ஆளுநரை சந்தித்து சால்வை அணிவித்து, கோரிக்கை மனுக்களை வழங்க முற்பட்டுள்ளனர். ஆனால், தற்போது ஆளுநர சந்திக்க முடியாது என அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை, இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறி விழாவில் இருந்து வெளியேறினர்.


பட்டங்களை வழங்கிய ஆளுநர்:


இதனிடையே, பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா நண்பகலில் தொடங்கியது. இதையடுத்து,  பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார். வழக்கமாக பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற அங்கிகள் தான் வழங்கப்படும். ஆனால், இந்த முறை பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெள்ளை நிற அங்கி வழங்கப்பட்டு இருந்தது.  இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும் ஆளுநர், சர்ச்சைக்குரிய பல்வேறு அரசியல் கருத்துகளை கூறுவது வழக்கம். ஆனால், பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியல் ரீதியாக எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.