அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் தொங்கும் பூங்கா எதிரே உள்ள அம்பேத்காரின் சிலைக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக காலை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக அம்பேத்கர் உருவசிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவசிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் அதிமுக மாநகர மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான ஒன்று திரண்டனர். பின்னர் அரசு கலைக்கல்லூரி சாலையிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் சேலத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமான திரண்டு வந்து இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


இதேபோன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் பாஸ்கர், சேலம் மாநகர துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இதைத்தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் இந்த ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயற்கைத்தை சேர்ந்தவர்கள் மேளதாளங்கள் முழங்க பேரணியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதனை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் பங்கேற்ற பேரணி சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி சுமார் இரண்டு கிலோமீட்டர் கடந்து அம்பேத்கர் சிலைக்கு வந்தடைந்தது. அப்போது ஒரு லட்சம் ரோஜா மாலைகளை கொண்ட பிரம்மாண்ட மாலையினை சேலம் விசிக மகளிர் அணி சார்பில் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த பேரணியில் 5000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.