தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2020,2021 ஆம் ஆண்டுகளில் உலக நாடுகளில் பெரும் பாதிப்புக்குள்ளான கொரோனா தொற்று மனித இழப்புகளையும், பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல மாதங்கள் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என பல கட்டங்களாக இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசிகளும் தொற்றை கட்டுக்குள் பெரிதும் துணை புரிந்தது. 


ஆனாலும் உலகளவில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 



இந்நிலையில் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. 


மேலும் வழக்குகள் பட்டியிலப்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நீதிமன்றத்தில் இருப்பவர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரவிடப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பு நிலவரம் 


கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு  நேற்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதிகபட்சமாக கேரளாவில் 3,089 பேருக்கும், டெல்லியில், 1,527 பேருக்கும்,  மகாராஷ்டிராவில் 1,086 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் ஹரியானாவில் 855 பேர், தமிழ்நாட்டில் 469 பேர், இமாச்சலபிரதேசத்தில் 440 பேர், உத்தரபிரதேசத்தில் 549 நபர்கள், குஜராத்தில் 417பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


 கர்நாடகாவில் 498, ராஜஸ்தானில் 293,  உத்தரகாண்டில் 196 பேர், சத்தீஸ்கரில் 370, பஞ்சாப்பில் 322,ஒடிசாவில் 258,  ஜம்முகாஷ்மீரில் 151, புதுச்சேரியில் 104,பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,47,97,269 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.