Amar Prasad Reddy: பாஜக  மாநில விளையாட்டு பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.


மேலும் ஒரு வழக்கில் கைது:


கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு  இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதில், பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டுமே  இருப்பதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை என அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டினார்.  


இதனையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படத்தை அந்த  விளம்பரங்களில் ஒட்டினார். இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அகற்றியதாக அவர் மீது கோட்டூர்புரம் பேலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் தற்போது அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இவரை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


தொடரும் கைது நடவடிக்கை:


முன்னதாக, சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளும்,பொதுமக்களும் கொடி கம்பத்தை அகற்ற சொல்லி புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 


இதனையறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிய போலீசார் இருபக்கமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கடந்த 21ஆம் தேதி  கைதாகி, தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான், மேலும் ஒரு வழக்கில் தற்போது கைதாகி உள்ளார். 




மேலும் படிக்க


TN Cabinet Meeting: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31-ல் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்...ஆலோசிக்கப்படும் விஷயங்கள் என்ன?


'நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது' ராஜ்பவன் தாக்குதல் விவகாரத்தில் ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு