கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக நடந்து வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.


இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 


ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன?


இதையடுத்து, எதற்காக பெட்ரோல் குண்டு வீசினாய் என்று போலீஸார் கேட்டதற்கு, ‘ஆளுநர் என்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கவில்லை. ‘நீட்’ தேர்வுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசினேன்’ என்று மதுபோதையில் உளறியதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, அந்த இளைஞர் கிண்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார், உதவி ஆணையர் சிவா ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது.


பகீர் கிளப்பிய ராஜ்பவன்:


இந்த சம்பவம் தமிழ்நாட்டில் புயலை கிளப்பிய நிலையில், ஆளுநர் மாளிகை சரமாரி குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. இதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றும் முக்கியமற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.


இந்த நிலையில், ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. 


 






அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டடுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: ஸ்கெட்ச் ஆந்திராவுக்கு இல்ல தெலங்கானாவுக்கு.. காய் நகர்த்திய பவன் கல்யாண் - செம்ம ட்விஸ்ட்