திருச்சி மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், "கொரோனா பெருந்தொற்று நோய் மேலாண்மையின் கீழ், திருச்சி மாநகராட்சியில் உள்ள தடுப்பூசி மையங்களில் உள்ள அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் மறு அறிவிப்பு வரும்வரை தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
திருச்சி மாவாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1099 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 1297 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், 11 பேர் நோய்த் தொற்றால் உயிர் இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள்:
திருச்சியில், 10619 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 434 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 999 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக, கொரோனா நோயாளிகளில் 90 சதவீதம் பேர் நுரையீரல் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல. கொரோனா நோயாளிகளில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. திருச்சியில், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் , 13 சதவிகிதம் பேருக்கு நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், இந்த எண்ணிக்கை 23.09 சதவிகிதமாக உள்ளது.
கோவையை உலுக்கும் கொரோனா : சென்னையை மிஞ்சிய பாதிப்பு எண்ணிக்கை
திருச்சி தடுப்பூசி நிலவரம்:
திருச்சியில் கடந்த ஒரு வார காலமாக, 18 வயது முதல் 44 வயதிக்கு உட்பட்ட செய்தித்தாள் விநியோகிப்பவர்கள், பால் விநியோகிப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மளிகை கடை பணியாளர்கள், உள்ளூர் பணியாளர்கள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பிற மாநில தொழிலாளர்கள் என அத்தியாவசிய சேவை புரியும் ஊழியர்களுக்கான தடுப்பூசி முகாம் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 2,59,928 ஆகவும், இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 65,895 ஆகவும் உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 43,453 தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்டத்தின் கீழ், ஒரு வாரத்தில் (மே 22- 28) நிர்வகிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னதாக, அதிகபட்ச வாரந்திர எண்ணிக்கை ( ஏப்ரல் 10- 16) 40,809 ஆக இருந்தது. இருப்பினும், திருச்சியில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாவட்டத்தில் 2.14 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான முழு பாதுகாப்பை கொண்டுள்ளனர்.